Friday, May 3, 2013

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்:காங்.தலைவர் சஜ்ஜன்குமார் விடுதலை!-நீதிபதி மீது ஷூ வீச்சு!

                        1 May 2013 Congress leader Sajjan Kumar acquitted; protests outside court

புதுடெல்லி:டெல்லியில் 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாரை விடுவித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 5 பேர் குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் மே 6-ம் தேதி நீதிமன்றத்துக்கு வரும்போது தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவிக்கும் எனத் தெரிகிறது.

சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரம் தொடர்பாக மேலும் ஒரு வழக்கு சஜ்ஜன் குமார் மீது உள்ளது. இந்த வழக்கில் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. இத்தீர்ப்பை வழங்கிய மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ஜே.ஆர்.ஆர்யன் மீது “ஷூ’ வீசப்பட்டது. இந்த வழக்கில் புகார் அளித்த ஜகதீஷ் கெளர் நீதிமன்ற அறைக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். நீதிமன்ற வளாகத்திலும் ஏராளமானோர் கூடி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பிரதமர் இந்திரா காந்தி, தனது மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலை செய்த இருவரும் சீக்கியர்கள் என்பதால் டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்களை கொன்று குவித்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சீக்கியர்கள் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார், முன்னாள் கவுன்சிலர் பல்வான் கோகர், முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திர யாதவ், கிஷண் கோகர், கிர்தாரி லால், கேப்டன் பாக்மல் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் பல்வான், கிர்தாரி, கேப்டன் பாக்மல் ஆகியோர் மீது கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு அதிகபட்சம் மரண தண்டனை வரை விதிக்கப்படலாம். கிஷண், மகேந்திரா ஆகியோர் மீது வன்முறை குற்றச்சாட்டு மட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பின்பு, 2005-ம் ஆண்டு நானாவதி கமிஷன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் சஜ்ஜன் குமார் உள்ளிட்டோர் மீதான வழக்கை சிபிஐ விசாரித்தது. 2010-ம் ஆண்டில் சிபிஐ, இவர்கள் மீது இரு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. கொலை, ஒரு சமூகத்தினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டுதல், சொத்துகளை சேதப்படுத்துதல், சதித்திட்டமிட்டு கொலை செய்தல், கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.

முன்னதாக சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை நிகழ்ந்தபோது போலீஸார் பாராமுகமாக இருந்தனர். வன்முறையில் சஜ்ஜன் குமாருக்கு முக்கியப் பங்கு இருந்துள்ளது. எனினும் அவரது பெயரை வழக்கு ஆவணங்களில் இருந்து போலீஸார் நீக்கியுள்ளனர் என்று சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதல் கூறியுள்ளார்.
இதுத்தொடர்பாக அவர்கூறுகையில்,’ சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது, இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சுமார் 30 ஆண்டுகளாக நீதிக்காக போராடியுள்ளனர். எனினும் அவர்களது நம்பிக்கை தகர்ந்துள்ளது. இது விஷயத்தில் காங்கிரஸ் அமைச்சர்களின் சதியும் உள்ளது. குற்றம் செய்த காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை அவர்கள் அழித்துவிட்டனர். இதனை சிபிஐ-யும் நீதிமன்றத்தில் கூறியுள்ளது’ என்றார் அவர்.

0 comments:

Post a Comment