25 May 2013
புதுடெல்லி:தீவிரவாத வழக்குகளை குறித்து விசாரணை நடத்தும் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகள் முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என்று தெரிந்தே வழக்குகளில் சிக்கவைத்து, மிருகத்தனமாக சித்திரவதைச் செய்து சிறையில் அடைக்கின்றனர் என்று பிரபல புலனாய்வு செய்தியாளரும், ஊடகவியலாளருமான ஆஷிஷ் கேதானின் புதிய புலனாய்வு அறிக்கை கூறுகிறது. ஆஷிஷ் கேதானின் செய்தி இணையதளமான குலைல் நியூஸில் இந்தியாவின் போலீஸ், உளவுத்துறை ஏஜன்சிகளின் பட்டவர்த்தனமான முஸ்லிம் எதிர்ப்பு அணுகுமுறையை தோலுரித்துக் காட்டும் புலனாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. நீதிமன்றங்களில் உண்மைகளை மூடி மறைக்கும் போலீசும், புலனாய்வு ஏஜன்சிகளும், குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றங்களில் தங்களை நிரபராதிகள் என்று நிரூபித்துவிடுவார்கள் என்று உறுதியாகும் போது சிறையில் வைத்து கொலைச் செய்வது அல்லது குவாண்டனாமோ மாதிரியில் கடுமையான சித்திரவதைகளைச் செய்து வாக்குமூலத்தை பதிவுச் செய்கின்றனர். இதனை 3 குண்டுவெடிப்புகளைவிசாரணைச் செய்த பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகள் தங்களது கேடுகெட்ட சூழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளனர் என்பதை போலீசாரிடமிருந்தே சேகரித்த ஆவணங்களின் அடிப்படையில் குலைல் நியூஸ் வெளியிட்ட புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைதான பிறகும் நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை குலைல் வெளியிட்டுள்ள போலீஸ் ஆவணங்கள் தெளிவுப்படுத்துகின்றன. 2010 புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு, 2006 மாலேகான் குண்டுவெடிப்பு, 2011-ஆம் ஆண்டு மும்பை ரெயில் குண்டுவெடிப்பு ஆகிய வழக்குகளில் டாக்டர்கள், எஞ்சீனியர்கள், ஆசிரியர்கள், ஐ.டி வல்லுநர்கள் உள்பட 21 பேர் மஹராஷ்ட்ரா, டெல்லி, கர்நாடகா போலீஸ் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு படைகளின் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு பலியாகி சிறைகளில் கடுமையான சித்திவதைகளை அனுபவித்து வருகின்றனர்.
இதில் 2010-ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 17 பேரின் மரணத்திற்கு காரணமான புனே ஜெர்மன் பேக்கரி வழக்கு தொடர்பாக குலைல் வெளியிட்டுள்ள ஆவணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சம்பவம் நடந்த உடனேயே பேக்கரியில் நிறுவப்பட்டிருந்த சி.சி.டி.வி பதிவுச் செய்த காட்சிகளில் இருந்து குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளதாக போலீஸ் அறிவித்தது. குண்டுவைத்த நபர் என்று குற்றம் சாட்டி கர்நாடகா மாநிலம் பட்கலைச் சார்ந்த அப்துல் ஸமதை மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப் படை கைதுச் செய்தது. 2010 ஜூன் மாதம் இச்சம்பவம் நிகழ்ந்தது. ஆனால், குண்டுவெடிப்பு நிகழ்ந்த வேளையில் அப்துல் ஸமது, சொந்த ஊரில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களுடன் அவரது பெற்றோர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த உடன் போலீஸ் அப்துல் ஸமதை கைதுச் செய்த நடவடிக்கையை கைவிட்டது. பின்னர் அப்துல் ஸமதின் சகோதரர் அஹ்மத் சித்திபாவா என்ற யாஸீன் பட்கல்தான் குற்றவாளி என்று ஏ.டி.எஸ் கூறியது. அதன் பிறகு இவ்வழக்கு தொடர்பாக மஹராஷ்ட்ரா மாநிலம் பீட் மாவட்டத்தில் இருந்து செப்டம்பர் மாதம் சைபர் கஃபே நடத்தி வந்த ஹிமாயத் பேக் கைதுச் செய்யப்பட்டார்.
யாஸீன் பட்கலுடன் பெப்ருவரி 13-ஆம் தேதி காலை ஐந்து மணிக்கு வெடிக்குண்டுகளுடன் புறப்பட்ட இவர், மாலை ஐந்து மணியளவில் பேக்கரியில் குண்டுவைத்தார் என்பது வழக்கு. குற்றம்சாட்டப்பட்ட ஹிமாயத் பேக் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று கூறிய போலீஸ், இவரிடமிருந்து வெடிப்பொருட்களை கைப்பற்றியதாக தெரிவித்தது. ஹிமாயத் பேக்கை பின்னர் புனே நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால், ஒரு ஆண்டு கழிந்து கடந்த 2011 நவம்பர் மாதம் டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு 28 வயதான பீகாரைச் சார்ந்த கத்தீல் சித்தீகி என்பவரைகைதுச் செய்தவுடன் இவ்வழக்கில் இன்னொரு திருப்பம் ஏற்பட்டது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடிய குண்டுவெடிப்புடன், புனே ஜெர்மன் பேக்கரிகுண்டுவெடிப்பு வழக்கிலும் கத்தீல் சித்திகிக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் கூறியது.
யாஸீன் பட்கலுடன் சேர்ந்து கத்தீல் சித்தீகி ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக அவரிடம் விசாரணை நடத்திய பிறகு டெல்லி, கர்நாடகா போலீஸ் தயாரித்த குற்றப்பத்திரிகை கூறுகிறது. அதேவேளையில், குண்டுவெடிப்பு நிகழ்ந்த பெப்ருவரி 13-ஆம் தேதி யாஸீன் பட்கல், கத்தீல் சித்தீகி ஆகியோருடன் கைதுச் செய்த ஹிமாயத் பேக்கைக் குறித்து எவ்வித தகவலும் அந்தக் குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை. இதன் மூலம் அன்றைய தினம் வெடிக்குண்டுடன் ஹிமாயத்தும், பட்கலும் காலையில் இணைந்து புறப்பட்டார்கள் என்ற மஹராஷ்ட்ரா போலீஸின் வாதம் பொய்யானது. ஆனால், மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸின் அதிகாரியான தினேஷ் காதம் டெல்லிக்குச் சென்று சித்தீகியிடம் விசாரணை நடத்தி வெடிக்குண்டுடன் சென்றது 11-ஆம் தேதி என்ற ரீதியில் வாக்குமூலத்தை பதிவுச் செய்தார். இவ்வழக்கில் இதர விளக்கங்கள் முழுமையாக டெல்லி போலீஸின் வாதங்களாகும். இந்த வாக்குமூலத்தை தான் புனே நீதிமன்றத்தில் ஏ.டி.எஸ் ஆஜர்படுத்தியது.
அதாவது ஒரே வழக்கில் டெல்லி, புனே நீதிமன்றங்களில் இரு வேறு புலனாய்வு ஏஜன்சிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளில் மாறுபட்ட நபர்கள், மாறுபட்ட தேதிகள். பின்னர் மும்பை கணேஷ் கோயிலில் குண்டுவைக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் சித்தீகியை கஸ்டடியில் வாங்கிய மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்.மிகுந்த பாதுகாப்பு நிறைந்த ஏரவாடா சிறையில் அடைத்தது. புனே நீதிமன்றத்தில் சித்திக்கிக்கு எதிராக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இவர் வெடிக்குண்டுடன் 11-ஆம் தேதி சென்றார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதே நபருக்கு எதிராக இதே வழக்கில் இன்னொரு குற்றப்பத்திரிகை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல்ச் செய்யப்பட்டுள்ளது என்பதை மூடி மறைத்தே இந்த குற்றப்பத்திரிகையை புனே நீதிமன்றத்தில் மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தாக்கல்ச் செய்தது. புனே நீதிமன்றத்தில் ஆஜராகவிருந்த நாளில் மிகுந்த பாதுகாப்பு நிறைந்த ஏரவாட சிறையில் சித்தீகி கொல்லப்பட்டார். சக கைதியுடன் ஏற்பட்ட தகராறில் சித்தீகி கொல்லப்பட்டதாக போலீஸ் கூறியது. போலீஸ் ஆவணங்களின் அடிப்படையில், ஜெர்மனி பேக்கரி வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹிமாயத் பேக்கின் வழக்கை மீண்டும் விசாரிக்கவேண்டும், சிறையில் வைத்து சித்தீகி கொல்லப்பட்டதுக் குறித்தும் அதனை மூடி மறைக்க போலீஸ் நடத்திய தகிடுதத்தங்களை குறித்தும்விசாரிக்கவேண்டும் என்று கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் குலைல் ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர்.
0 comments:
Post a Comment