14 Mar 2013
இம்பால்:மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி 12 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளா, முதல் வகுப்பு ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் படி விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். ஆனால், விடுதலையான பிறகு ஷர்மிளா ‘ஷேவ் ஷர்மிளா’ அலுவலகத்திற்கு சென்று உண்ணாவிரதத்தை தொடருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
தற்கொலைக்கு முயன்றார் என்ற குற்றம் சாட்டி போலீஸ் ஷர்மிளாவை கைது செய்தது. போலீஸ் காவலில் ஜெ.என்.ஐ மெடிக்கல் சயன்ஸ் மருத்துவமனையில் ஷர்மிளா வைக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் மூக்கின் வழியாக ஷர்மிளாவுக்கு திரவ உணவு வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்டு வந்தது.
டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அண்மையில் நடந்த விசாரணையில் தன் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவுச் செய்யப்பட்டதில் நிராசையடைந்திருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காந்தியின் தத்துவங்களை பின்பற்றி AFPSA வுக்கு எதிராக போராட மட்டுமே தான் செய்வதாகவும், இந்த கறுப்புச் சட்டத்தின் பின்னணியில் அட்டூழியங்கள் நடத்திய ராணுவத்திற்கு எதிராகத்தான் தனது போராட்டம் என்று ஷர்மிளா கூறினார்.
தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக என்று கூறி கொண்டுவரப்பட்ட இச்சட்டம் சாதாரண மக்களை துன்புறுத்தவே பயன்படுத்தப்படுகிறது. மணிப்பூர் மாநில மக்களை அடக்கி ஒடுக்கவே மத்திய அரசு இச்சட்டத்தை வலுக்கட்டாயமாக திணித்துள்ளது என்று ஷர்மிளா குற்றம் சாட்டினார்.
‘அப்ஸாவை(AFPSA) வாபஸ் பெறும் வரை போராட்டத்தை தொடருவேன். போராட்டத்தில் நான் மரணித்தால் மீண்டும் மணிப்பூரில் பிறக்க விரும்பவில்லை. எனது அமைப்பிற்கு மக்கள் ஆதரவளிக்கவேண்டும்’ என்று ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
தற்கொலைக்கு முயன்றார் என்று குற்றம் சாட்டி போலீஸ் மீண்டும் ஷர்மிளாவை கைது செய்யும் என்றும் கடந்த 12 ஆண்டுகளாக அவர்கள் இதனைத்தான் செய்துவருகின்றார்கள் எனவும் ஷர்மிளாவின் சகோதரர் இரோம் சிங்கஜித் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment