14 Mar 2013
கோல்பாரா:அஸ்ஸாமில் அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு சிறுவனை அடித்துக் கொன்றனர். இச்சம்பத்தைக் கண்டித்து போலீஸ் அதிகாரியை மக்கள் சிறைப் பிடித்தனர்.
அஸ்ஸாமின் மொய்லாபத்தர் பகுதியில் இருந்து இரண்டு சிறுவர்கள் செவ்வாய்க்கிழமை காலையில் துப்டோலா மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை அடையாளம் தெரியாத சிலர் வழிமறித்தனர். அஜிபோர் அலி(15) என்ற சிறுவனை அந்த நபர்கள் அடித்துக் கொன்றனர். மற்றொரு சிறுவனைத் தாக்கி, படுகாயப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக் கண்காணிப்பாளரை சிறைப் பிடித்தனர். குற்றவாளிகளை அவர் தப்பிக்க விட்டதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
தகவல் அறிந்து, உயர் போலீஸ் அதிகாரிகள், ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸார் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். சிறைப் பிடிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியை விடுவிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்களை சமாதானப்படுத்த இயலவில்லை. இதைத் தொடர்ந்து, போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மக்களின் கட்டுப்பாட்டில் இருந்து போலீஸ் அதிகாரியை மீட்டனர். அங்கு நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment