10 Mar 2013
புதுடெல்லி:இதர ஜனநாயக நாடுகளைப் போல் திருமணம் என்பது இந்தியாவில் ஓர் ஒப்பந்தமாகக் கருதப்படவில்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய வர்த்தகர்கள் சங்கத்தின் கூட்டத்தில் அவர் பேசியது:
சட்டம் என்பது சமகால உண்மை நிலவரங்களைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு வழக்கை மட்டும் மனதில் கொண்டு சட்டங்களை உருவாக்க முடியாது. பல ஆண்டுகளுக்கு ஒவ்வொரு வழக்குக்கும் பொருந்தக் கூடியதாக சட்டம் இருக்க வேண்டும். அது நாடு முன்னேறுவதற்கு உதவ வேண்டுமே தவிர, பின்தங்குவதற்கு வழிவகுக்கக் கூடாது.
சமீபத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு காரணங்களுக்காக மனைவியின் விருப்பமின்றி கணவன் உறவு கொள்வதைச் சேர்க்கவில்லை. அவற்றில், மற்ற ஜனநாயக நாடுகளைப் போல் திருமணம் என்பது இந்தியாவில் ஒரு ஒப்பந்தமாகக் கருதப்படவில்லை என்பதும் ஒரு காரணமாகும்.
எனினும் தனது கணவரை விட்டு ஒரு மனைவி பிரிந்தார் என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு, அந்தப் பெண் மீது அவர் பாலியல் தாக்குதல் நடத்தினால் அவர் மீது வழக்கப்பதிவு செய்யப்படும்.
இந்த அவசரச் சட்டம் அடுத்த வாரம் அமைச்சரவை முன்பு வைக்கப்படும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த தில்லி பாலியல் சம்பவத்துக்குப் பின், அரசு ஒரு சாதனையாக, மிகக் குறைந்த நேரத்தில் பாலியல் குற்றம் தொடர்பான மசோதாவைத் தயாரித்தது.
சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்த சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். சட்டத்தில் ஓட்டைகள் இருந்தால், அது அப்பட்டமான மீறல்களுக்கே வழிவகுக்கும். இந்திய தண்டனைச் சட்டம் 498(ஏ) பிரிவின்படி வரதட்சணைக் கொடுமைக்கு தண்டனை அளிக்கலாம்.
ஆனால் இந்த சட்டப் பிரிவானது பெரிய அளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. நான் அது குறித்து எதுவும் செய்ய இயலாது. நான் ஏதாவது செய்தால், சில மகளிர் அமைப்புகள் அதை எதிர்த்து போர்க்கொடி தூக்கிவிடும் என்றார் அஸ்வினி குமார்.
ஆனால், அஸ்வினி குமார் முஸ்லிம்களின் திருமணம் சட்டம் குறித்து தெரியாமலேயே பேசியுள்ளார். இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒரு உறுதியான ஒப்பந்தமாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment