15 Mar 2013
சென்னை:ஐ.நா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் தொடங்கி வைத்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கல்லூரி மாணவர்கள், இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளனர்.
ஐ.நா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும். போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும். இனப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இலங்கையில் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளே கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டங்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்களில் 12 பேர் கடற்கரைச் சாலையில் அம்பேத்கர் மணிமண்டபம் அருகிலும், 9 பேர் புதிய பேருந்து நிலையம் முன்பும் கடந்த 11ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து நிலையத்தில் உண்ணாவிரதம் இருந்த 9 பேரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் புதுச்சேரி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் 12ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பொன்னமராவதியில் கணேசர் கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவியர் 200 பேர் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர். பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் உருவப் படம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி சட்டக்கல்லூரி விடுதி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இலங்கை அரசைக் கண்டித்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி விடுதியில் 30 மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தனர். இதில் பழனிக்குமார் என்ற மாணவரின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி மாணவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்படோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் 11 பேர், போராட்டத்தை தற்காலிமாக முடித்துக் கொண்டனர். இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக மாற்றுவழியில் போராடப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 50 பேர் 13ம் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் என்ற மாணவர், சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல், திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
0 comments:
Post a Comment