7 Mar 2013
புதுடெல்லி:பாஜகவினரின் ஆணவப் பேச்சு அதிகரித்து விட்டது; எனவே தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் தோல்வியடையும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி, பிரதமரை கடுமையாகச் சாடிப் பேசினார்.
இந்நிலையில் மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய மன்மோகன் சிங் பாஜகவுக்கு பதிலடி தரும் வகையில் ஆவேசமாகப் பேசினார்.
அதன் சுருக்கம்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் தோல்வியைத் தழுவும். அவர்களின் ஆணவப் பேச்சுக்கு அது சரியான பதிலடியாக அமையும். 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் வறுமை குறைந்துள்ளது.
எங்கள் செயல்பாடுகள் மீது நம்பிக்கை வைத்து, 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்களித்தது போலவே அடுத்த ஆண்டு தேர்தலிலும் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பார்கள். அந்த தேர்தலில் பாஜகவினரால் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்ட அத்வானி நிலை எப்படி இருந்தது என்பதை யோசிக்க வேண்டும்.
பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் காங்கிரஸ் தலைவர்களை அவதூறாகப் பேசியுள்ளனர். இதற்காக அவர்களைப் போன்று நான் பேச விரும்பவில்லை. எங்கள் ஆட்சியின் செயல்பாடுகளே இதற்கு சிறந்த பதிலாக இருக்கிறது. வெறும் இடி முழக்கங்களை ஏற்படுத்தும் மேகங்கள் மழையைத் தராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று மன்மோகன் சிங் பேசினார்.
தொடர்ந்த தேசியப் பிரச்னைகள் குறித்துப் பேசிய அவர், “நீர் வளத்தை நிர்வகிப்பதில் பிரச்னை உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இப்பிரச்னையைத் தீர்க்க சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. வேளாண் துறை உற்பத்தி எதிர்பார்த்ததை விட 1.8 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்களின் பாதுகாப்பையும், அவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவதையும் உறுதி செய்ய மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நமது பொருளாதாரம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையைக் கடந்து வந்துள்ளது. எனினும் சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகவே உள்ளது என்று மன்மோகன் சிங் பேசினார்.
தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் குறித்துப் பேசிய மன்மோகன் சிங், ”அத்தீர்மானத்தில் உள்ள ஷரத்துகள் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். அதே நேரத்தில் இலங்கையில் தமிழர்கள் கண்ணியமாகவும், சமஉரிமையுடனும் வாழ வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது “ என்றார்.
0 comments:
Post a Comment