22 Mar 2013
ராமல்லா:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஃபலஸ்தீனுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். மேற்காசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஒபாமா நேற்று ஃபலஸ்தீன் மேற்கு கரைக்குச் சென்றார்.ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் ஒபாமா சந்திப்பை நடத்தினார். ராமல்லாவில் அதிபரின் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடந்தது.
ஃபலஸ்தீன் – இஸ்ரேல் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் துவக்குவது தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட ஃபலஸ்தீனும், இஸ்ரேலும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் ஃபலஸ்தீனில் இஸ்ரேல் கட்டி வரும் குடியிருப்புக்கள் அமைதிக்கு முக்கிய தடை எனவும் ஃபலஸ்தீன் தலைவர்களுடனான சந்திப்பிற்கு பிறகு ஒபாமா தெரிவித்தார்.
சுதந்திர ஃபலஸ்தீன் நாடு என்ற கோரிக்கையை அமெரிக்கா முக்கியத்துவம் அளித்து பரிசீலிப்பதாகவும் இரு தரப்பில் இருந்து உருவாகும் ஒரு தலைபட்சமான நடவடிக்கைகள் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் ஒபாமா தெரிவித்தார்.
மேற்காசியா சுற்றுப்பயணத்தில் நேற்று முன் தினம் பாரக் ஒபாமா இஸ்ரேலுக்கு சென்றார். இஸ்ரேலுக்கு தங்களது ஆதரவு என்றும் உண்டு என்று பாராக் ஒபாமா கூறினார். பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா உறுதிப்பூண்டுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு கேடு விளைவிக்காத சுதந்திர ஃபலஸ்தீன் நாட்டின் மூலமே பிரச்சனைக்கு தீர்வு காண இயலும் என்று ஒபாமா கூறினார்.
0 comments:
Post a Comment