Saturday, March 16, 2013

யு.பி.எஸ்.சி-இலங்கை விவகாரம்:பாராளுமன்றத்தில் கடும் அமளி!

                      16 Mar 2013 பாராளுமன்றத்தில் கடும் அமளி
 
     புதுடெல்லி:சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடர்பாக, யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெறவேண்டும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரியும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
 
     சிவில் சர்வீஸ் தேர்வு தொடர்பாக யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும்” என்று சமாஜவாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
 
     அப்போது, அவையின் மையப் பகுதிக்கு வந்த மு. தம்பிதுரை தலைமையில் செம்மலை, எம். ஆனந்த், பி. வேணுகோபால், ஓ.எஸ். மணியன், பி. குமார் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள், “யு.பி.எஸ்.சி. தேர்வு முறை குறித்த புதிய அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும்; ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்” என்று குரல் எழுப்பினர்.
 
     விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி. லிங்கம், மதிமுக உறுப்பினர் கணேசமூர்த்தி உள்ளிட்டோரும் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினர். டி.ஆர். பாலு தலைமையிலான திமுக உறுப்பினர்கள் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான நிலையை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரி அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதையடுத்து அவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.
 
மாநிலங்களவை, காலையில் அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் தொடங்கியதும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் இதே பிரச்னைகளை எழுப்பினர். தொடர்ந்து வெவ்வேறு பிரச்னைகளால் அமளி நீடித்தது. அதனால், காலை 11.40 மணி வரை அவை நடவடிக்கைகளை ஹமீது அன்ஸாரி ஒத்திவைத்தார்.

0 comments:

Post a Comment