18 Mar 2013
லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுங்கட்சியான சமாஜ்வாதியுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்ததாக டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதின் ஷாஹி இமாம் செய்யது அஹ்மத் புகாரி அறிவித்துள்ளார்.
சமாஜ்வாதிக்கட்சி தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் தனது ஆதரவாளர்கள் தமது பதவிகளை ராஜினாமாச் செய்த கடிதங்களை கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவிற்கு அளித்துள்ளதாக செய்தியாளர்களிடம் டெல்லி இமாம் கூறினார்.
உ.பி சட்டப்பேரவை கவுன்சிலில் உறுப்பினர்களான உமர் அலி கான், சிவில் டிஃபன்ஸ் கவுன்சில் தலைவர் வஸீம் அஹ்மத் உள்ளிட்ட உதவியாளர்கள் தமது பதவிகளை ராஜினாமாச் செய்த கடிதம் முலாயம்சிங்கிடம் அளித்துள்ளதாக அவர் கூறினார். ஒரு வருடம் கழிந்த பிறகும் முஸ்லிம்களுக்காக சமாஜ்வாதிக் கட்சி அரசு எதுவும் செய்யவில்லை என்பதால் இந்த திடீர் நடவடிக்கை காரணம் என்று அவர் விளக்கம் அளித்தார்.
மேலும் டெல்லி இமாம் கூறியது: சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக முலாயம்சிங் யாதவ் என்னிடம் ஆதரவு கோரினார். அவ்வேளையில் முஸ்லிம்களுக்கு 18 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்துதல் உள்ளிட்ட எனது கோரிக்கைகளை முலாயம் அங்கீகரித்தார். ஆனால், இக்கோரிக்கைகளை இதுவரை நடைமுறைப்படுத்தாததுடன், முஸ்லிம்களின் அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் 113 கலவரங்கள் மாநிலத்தில் நடந்துள்ளன. 13 இடங்களில் தற்போதும் ஊரடங்கு உத்தரவு நிலவுகிறது. ஆட்சியில் போதிய பிரதிநிதித்துவம் முஸ்லிம்களுக்கு இல்லை. இவ்வாறு செய்யத் புகாரி கூறினார்.
சிவில் டிஃபன்ஸ் கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்ததாக வஸீம் உறுதிச் செய்துள்ளார். டி.எஸ்.பி ஸியாவுல் ஹக்கின் கொலைதான் டெல்லி இமாமை இத்தகையதொரு முடிவை எடுக்க தள்ளியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பிரதாப்கரில் கிராமத் தலைவர் மரணம் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சரணடைந்துள்ளனர். கிராமத் தலைவரை கொலைச் செய்த சம்பவத்தில் ஏற்பட்ட மோதலில் முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த போலீஸ் எஸ்.பி கொல்லப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment