24 Mar 2013
புதுடெல்லி:மும்பையில் 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மகாராஷ்டிர ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் என இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: 1993-ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சஞ்சய் தத், ஏற்கெனவே பல சிரமங்ளை அனுபவித்துவிட்டார். ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த அவர், அந்தக் காலகட்டத்தில் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்தவராக நடந்துகொண்டுள்ளார்.
நீதிமன்றம் அழைக்கும்போதெல்லாம் தவறாமல் ஆஜர் ஆகி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். தான் நடிக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டு அரசின் அனுமதியைப் பெற்றிருக்கிறார். மேலும் வழக்கு நடந்துகொண்டிருந்ததால் வங்கிகள் அவருக்குக் கடன் தர மறுத்துவிட்டன. 20 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சஞ்சய் தத்துக்கு நேரடித் தொடர்பு இல்லை. அதனால் சட்டப்பிரிவு 161-ஐப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
தண்டனையை ரத்து செய்ய சஞ்சய் தத் வேண்டினால் மகாராஷ்டிர ஆளுநர் கே.சங்கரநாராயணன் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி சஞ்சய் தத்தின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார் மார்கண்டேய கட்ஜு.
இது குறித்து சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் கூறியதாவது: ஆளுநர் மனது வைத்தால் சஞ்சய் தத்தின் தண்டனையை ரத்து செய்யலாம் அல்லது குறைந்தபட்ச தண்டனை விதிக்கலாம். அவருக்கு அதற்குரிய அதிகாரம் இருக்கிறது என்றார். இதற்கு பா.ஜ.கவும், சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment