24 Mar 2013
டெல்அவீவ்:2010-ஆம் ஆண்டு ஃப்ளோடில்லா நிவாரண கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரியுள்ளது. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் முயற்சியின் பலனாக துருக்கியைச் சார்ந்த ஒன்பது மனித உரிமை ஆர்வலர்களின் கொலைக்கு காரணமான தாக்குதலுக்கு இஸ்ரேல் மன்னிப்புக் கோரியது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானை போனில் அழைத்து மன்னிப்புக் கோரியுள்ளார் என்று ஒபாமா தனது அறிக்கையில் கூறினார். ராணுவ நடவடிக்கையில் ஏற்பட்ட தவறு மூலமாக இத்தகையதொரு சம்பவம் நிகழ்ந்ததாக நெதன்யாகு எர்துகானிடம் தெரிவித்துள்ளார். நெதன்யாகுவின் மன்னிப்பை எர்துகான் ஏற்றுக்கொண்டதாக துருக்கி பத்திரிகையான ஹுர்ரியத் டெய்லி நியூஸ் கூறுகிறது.
துருக்கியுடனான உறவை பழையதுபோல் புதுப்பிக்கவேண்டுமென்று நேற்று முன்தினம் மேற்காசியா சுற்றுப்பயணத்தில் ஒபாமா, நெதன்யாகுவிற்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், என்னக் காரியங்களெல்லாம் எர்துகானும், நெதன்யாகுவும் போனில் பேசினார்கள் என்பது தெளிவாக வெளியாகவில்லை. தங்களுக்கு நெருக்கமான துருக்கியும், இஸ்ரேலும் இடையேயான உறவுக்கு அமெரிக்கா மிகப்பெரிய மதிப்பளிப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளையில் இச்சம்பவம் தொடர்பாக துருக்கி மற்றும் இஸ்ரேலிடமிருந்து அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை. 2010 -ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு பிறகு இருநாடுகள் இடையேயான உறவு சீர்குலைந்தது.
0 comments:
Post a Comment