29 Dec 2012
மலப்புரம்:தீவிரவாத குற்றம் சாட்டி நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளின் விடுதலைக்காக பொது அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று பிரபல மூத்த பத்திரிகையாளரும், இஸ்ரேல் தூதரக அதிகாரியின் காரில் குண்டுவெடித்த சம்பவத்தில் அநியாயமாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையான செய்யத் முஹம்மது அஹ்மத் காஸ்மி கூறியுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் காஸ்மி கூறியது:ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் தீவிரவாதத்தின் இரைகளாக ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு நான், 7 மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது இதைப்போல ஏராளமானோரை சிறையில் காண நேர்ந்தது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு வரும் சிலர் இஸ்ரேல்-அமெரிக்க எதிர்ப்புணர்வை ஊட்டி இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் இழுத்து பிரயோகிக்கின்றனர். இவ்வாறு முஸ்லிம் இளைஞர்களிடம் தீவிரவாத சிந்தனையை வளர்த்தி அவர்கள் பொய்வழக்குகளில் சிறையில் அடைக்கப்படும் போது சம்பந்தப்பட்டவர்கள் மாயமாகிவிடுவார்கள். மிகவும் திட்டமிட்ட சூழ்ச்சி இந்த நடவடிக்கைகளின் பின்னால் உள்ளது. ஊடகவியலாளர்களில் சிலர் புலனாய்வு ஏஜன்சிகளின் கண்டுபிடிப்புகளை உண்மையான செய்திகளாக வெளியிடுகின்றனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து எழுதியதால் இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு வழக்கில் என்னை குற்றவாளியாக்கி சிறையில் அடைத்தனர். முஸ்லிம் நாடுகளில் ஜனநாயகத்திற்காக நடக்கும் போராட்டங்களை அதிகமாக அஞ்சுவது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆகும். பிராந்தியத்தில் இவர்களின் கட்டுப்பாடு கைவிட்டுப் போகும் என்பதே இதற்கு காரணம்.
எகிப்தில் தஹ்ரீர் சதுக்கத்தில் நடந்த புரட்சியின் அலை ஒலிகள் இந்தியாவிலும் எட்டிவிட்டது என்பதன் அடையாளம் தான் கடந்த சில தினங்களாக டெல்லியில் நடக்கும் போராட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அராஜகத்திற்கு எதிரான இளைஞர்களின் கோபத்தை கண்டும் காணாமல் நடிப்பதற்கு ஆட்சியாளர்களால் முடியாது. இவ்வாறு காஸ்மி கூறினார். நன்றி, தூது
0 comments:
Post a Comment