22 Dec 2012
கெய்ரோ:இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திட்டங்களின் அடிப்படையிலான அரசியல் சாசனத்தின் மீதான மக்கள் விருப்ப வாக்கெடுப்பின் 2-வது கட்டம் எகிப்தில் இன்று நடைபெறுகிறது. 17 மாகாணங்களில் இன்று வாக்கெடுப்பு நடக்கிறது. முதல் கட்ட வாக்கெடுப்பு நடந்த தலைநகர் கெய்ரோ, அலெக்சாண்ட்ரியா உள்ளிட்ட இடங்களில் பதிவான வாக்குகளில் 57 சதவீதம் பேர் அரசியல் சாசனத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் ராணுவம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்காளர்களின் பாதுகாப்புக்காக 20 ஆயிரம் படை வீரர்களும், 130000 போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
புதிய அரசியல் சாசனத்திற்கும், முர்ஸிக்கும் ஆதரவாக எகிப்தின் பல்வேறு நகரங்களில் இஸ்லாமிய கட்சிகள் பேரணிகள் நடத்தினர். முஸ்லிம் அறிஞர்களையும், மஸ்ஜிதுகளையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்ற பிரகடனத்துடன் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பேரணி நடத்த இஃவானுல் முஸ்லிமீன் அழைப்பு விடுத்திருந்தது.
நகரத்தில் காயித் இப்ராஹீம் மஸ்ஜிதுக்கு அருகே இஃவான் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை ஜும் ஆவில் உரையாற்றுகையில் அரசியல் சாசனத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்த ஷேக் அஹ்மத் அல் மஹாலவியை எதிர்கட்சியினர் மஸ்ஜிதில் தடுத்து வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று இஃவான் உறுப்பினர்கள் இங்கே திரண்டனர். எதிர்கட்சியினர் மஸ்ஜிதில் மோதலை உருவாக்க சதித் திட்டம் தீட்டியுள்ளதாக இஃவானுல் முஸ்லிமீன் குற்றம் சாட்டியுள்ளது.
பேரணியில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸ் கண்ணீர் புகையை வீசியது. அமைதியாக துவங்கிய பேரணிக்கு ஒப்பாக எதிர்கட்சியினரும் பேரணி நடத்த முயன்றதால் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் 32 பேருக்கு காயம் ஏற்பட்டதாக அல் அஹ்ராம் பத்திரிகை கூறுகிறது. அரசியல் சாசனத்தை ஆதரித்து ஸலஃபிகளின் அந்நூர் கட்சியும் பேரணி நடத்தியது. அரசியல் சாசனத்தை எதிர்த்து வாக்களிக்க கோரி எதிர்கட்சியினர் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் வீடுவீடாகச் சென்று எதிர்கட்சியினர் பிரச்சாரம் நடத்தினர்.
0 comments:
Post a Comment