Tuesday, December 18, 2012

முஸ்லிம்கள் ஏன் கம்யூனிஸ்டுகளை விட்டு விலகுகிறார்கள்?

        8th_mar_sun-C.pmd 18 Dec 2012
 
     கட்சி செயல்பாடுகளை குறித்து இதர அரசியல் கட்சிகளில் இருந்து மாறுபட்டு உண்மையான தகவல்களின் அடிப்படையில் மீளாய்வு செய்து தவறுகளை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் பண்பு இந்தியாவின் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பாகும்.
 
     பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும் மாபெரும் மாநாடுகளை நடத்தும் வேளையில், நீண்ட நேர உரைகளை எதுகை, மோனையுடன் ஆற்றி, தொண்டர்களின் உணர்ச்சிகளை தூண்டி அவர்களை ஆவேசப்படுத்தி நாம் செய்வது அனைத்தும் நல்லதே! என்ற திருப்தியுடன் முடித்துக்கொள்வதுதான் வழக்கம். ஆனால், கம்யூனிஸ்டுகள் சற்று வித்தியாசமானவர்கள்.
 
    கடந்த கால கட்சியின் செயல்பாடுகளை மீளாய்வு செய்வார்கள். வரவு, செலவு கணக்குகளையெல்லாம் சரியாக பரிசோதித்து தணிக்கைச் செய்வார்கள். நிகழ்ந்துவிட்ட தவறுகளுக்கு பரிகாரம் காண மாற்று வழிகளை குறித்து ஆராய்வார்கள்.
 
    அவ்வகையில் கோழிக்கோட்டில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்(சி.பி.எம்) 20-வது மாநாடும் அடங்கும். சி.பி.எம்மின் 20-வது கட்சி மாநாட்டில் நடத்தப்பட்ட மீளாய்வுகளில் ஒன்று என்னவெனில், ஏன் இந்திய முஸ்லிம்கள் சி.பி.எம்மில் இருந்து விலகுகிறார்கள்? தேசிய அளவில் முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைமைக்கு என்ன காரணம்? என்பதாகும்.
 
    கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரும் செல்வாக்குள்ள மாநிலங்களான கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா ஆகியவற்றில் முஸ்லிம்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இணைவதற்கு தயக்கம் காட்டுவது மட்டுமின்றி, இதர மதத்தினரை விட கட்சியில் இருந்து விலகுவதும் அதிகரித்து வருகிறது.
 
    தேசிய அளவில் 2007-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்(சி.பி.எம்) முஸ்லிம்களின் எண்ணிக்கை 10.35 சதவீதம் என கணக்கிடப்படுகிறது. ஆனால், 2012-ஆம் ஆண்டில் அதாவது 5 ஆண்டுகளில் 9.55 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்தம் சி.பி.எம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10, 44, 833 ஆகும். அவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 99,990 ஆகும்.
 
    இறைக்கொள்கை, மரணத்திற்கு பிந்தைய மறுமை வாழ்வு ஆகியவற்றில் தெளிவான உறுதியான கொள்கையை கொண்ட முஸ்லிம்கள் கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தில் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்பது புதிய செய்தி அல்ல. ஆனால், நம்பிக்கை ரீதியாக முரண்பாடு நிலவிய பிறகும் ஒரு காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பணியாற்றியவர்கள் தற்பொழுது விலகுவதற்கு என்ன காரணம்? இது நம்பிக்கை மற்றும் தத்துவங்களை ஒதுக்கிவைத்துவிட்டு விவாதிக்க வேண்டிய பிரச்சனையாகும்.
 
    பணக்காரன், ஏழை ஆகிய இரண்டு பிரிவினர் மட்டுமே இப்பூவுலகில் வாழ்கின்றனர் என்பது மார்க்சீய சித்தாந்தத்தின் பார்வையாகும். ஆனால், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்த ஒரு மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட மத சிறுபான்மையினர் மட்டும் மேலும் மேலும் ஏழைகளாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும் ஏன் மாற்றப்பட்டார்கள்? என்பது குறித்து சி.பி.எம் கட்டாயம் பதில் அளித்தே ஆகவேண்டும்.
 
    பிரிவினை வாதம் மற்றும் வகுப்புவாதத்தின் வைரஸ் கிருமிகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் எவ்வாறு ஊடுருவியது? இந்தியாவில் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளைப் போல மேல் ஜாதியினர் கட்சியின் தலைமையில் ஆதிக்கம் செலுத்தாமல் இது எவ்வாறு சாத்தியமானது?.
 
    அரசியலில் பலம் பெறுவதற்காக முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்ட இதர சமூகத்தினருடன் இணைந்து புதிய அரசியல் கட்சியை சி.பி.எம் ஆட்சிபுரிந்த ஒரு மாநிலத்தில் துவக்கிய வேளையில் அக்கட்சியை எவ்வாறேனும் அழித்தாக வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு கை வெட்டு சம்பவத்தின் பெயரால் கங்கணம் கட்டி செயல்பட்டது ஏன்?
 
    முஸ்லிம்கள் ஒட்டுண்ணிகளைப் போல தங்களை சார்ந்துதான் வாழவேண்டும், சுயமாக ஒரு அரசியல் முன்னேற்றத்தைக் குறித்து சிந்தித்து விடக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் சிந்திப்பது ஏன்?
 
    மேற்கண்ட கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான பதில்களை அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக வேண்டும். அத்துடன் கட்சிக்குள் ஊடுருவியிருக்கும் வகுப்புவாத, பிரிவினைவாத சக்திகளை களையெடுக்க முயலவேண்டும். இல்லையெனில் வரும் காலங்களில் கம்யூனிஸ்டுகளுக்கு முஸ்லிம் சிறுபான்மையினரின் ஆதரவு கானல் நீராகிவிடும்.
 
அ.செய்யது அலீ.

0 comments:

Post a Comment