Sunday, December 23, 2012

மது போதையால் பாலியல் வல்லுறவு சம்பவங்கள்: மக்கள் சக்தியை திரட்டி போராட்டம்-வைகோ!

 vaiko   23 Dec 2012
 
     விருதுநகர்:தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்துவதற்கு மக்கள் சக்தியை திரட்டிப் போராடுவேன் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறினார். மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி திருநெல்வேலி மாவட்டம், உவரியிலிருந்து மதுரை வரையில் தொண்டர்களுடன் வைகோ விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

     திருத்தங்கல் அருகே செங்கமலநாச்சியார்புரம் கிராமத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக வெள்ளிக்கிழமை இரவு எரிச்சநத்தம் கிராமத்துக்கு அவர் வந்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: அண்மையில் புது டெல்லியில் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், தூத்துக்குடி மாவட்டம், செங்துங்கநல்லூரில் 12 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவை மது போதையால்தான் நடந்துள்ளன.

     இச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமை நமது கிராமங்களுக்கு வந்துவிடக் கூடாது. தமிழகத்திலுள்ள மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மதுக் கடைகளை ஒழிக்க மக்கள் சக்தியைத் திரட்டிப் போராடுவேன். மதுக் கடைகளை மூடினால், சில இடங்களில் கள்ளச் சாராயம் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. அதை எல்லோரும் போய் குடிக்க மாட்டார்கள். இதனால் இளைஞர்கள், மாணவர்கள் குடியிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

     கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தேன், அதற்காக வருத்தப்படவில்லை. தற்போது, அடுத்து வரவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு வாக்குக் கேட்டுத்தான் முன்னதாகவே நான் கிராமங்களுக்குச் செல்வதாக சிலர் கூறுகிறார்கள். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. இளைஞர்கள், மாணவ சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து போராடுவேன் என்றார் வைகோ. நன்றி, தூது

0 comments:

Post a Comment