Saturday, December 22, 2012

சாதிக் ஜமால் போலி என்கவுண்டர் வழக்கு: 5 போலீஸ் அதிகாரிகள் கைது!

daya nayak   22 Dec 2012
 
    அஹ்மதாபாத்:குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சாதிக் ஜமால் என்பவரை அநியாயமாக போலி என்கவுண்டரில் படுகொலை செய்த வழக்கில் 5 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
    கடந்த 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம், குஜராத் மாநிலம் பவா நகரை சேர்ந்த சாதிக் ஜமால் என்பவரை குஜராத் போலீசார் அகமதாபாத்தில் எண்கவுன்டரில் சுட்டுக்கொன்றார். இந்த சம்பவம் போலி எண்கவுன்டர், இதுதொடர்பாக மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என சாதிக் ஜமாலின் சகோதரர், சபீர் ஜமால் என்பவர் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
 
     இந்நிலையில், மும்பை போலீஸ் படையை சேர்ந்த ‘எண்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ தயா நாயக் என்பவரிடம் குஜராத் போலீசார் சாதிக் ஜமாலை ஒப்படைத்த காட்சியை, தான் நேரில் பார்த்ததாக, கேத்தன் தரோட்கர் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார்.
 
    இதனையடுத்து, இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு குஜராத் ஐகோர்ட் உத்தரவிட்டது. சி.பி.ஐ. போலீசார், குஜராத் போலீசாரிடம் நடத்திய விசாரணையில் துணை போலீஸ் சூப்பிரண்ட் பர்மார், இன்ஸ்பெக்டர்கள் கோகில், மவானி, தலைமை காவலர்கள் அஜய்பால் சிங், சத்ரசிங் சுதஸ்மா ஆகியோரை கைது செய்து, நேற்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 
    வழக்கம்போல் நீதிபதியிடம் விசாரணைக்காவல் கேட்காமல், கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் போலீசார் குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரோட் மற்றும் மேலும் 2 ஓய்வுபெற்ற போலீசார் என மொத்தம் 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
    ஓய்வுபெற்ற 2 போலீசாரையும் கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வழங்கும்படி சி.பி.ஐ. போலீசார் நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

0 comments:

Post a Comment