Saturday, December 29, 2012

செய்தி தொலைக்காட்சி சானல்கள் நீதிபதிகளா?: திக் விஜய் சிங் கடும் தாக்கு!

29 Dec 2012
 
     புதுடெல்லி:நீதிபதிகள் செய்ய வேண்டிய பணிகளை செய்தித் தொலைக்காட்சிகள் செய்கின்றன என்று காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இளம் பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தை அடுத்து டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தித் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய செய்திகளை அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
 
     மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங் இது தொடர்பாக மேலும் கூறியது:டெல்லியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போது காவல் நிலையம், வழக்குரைஞர்கள், நீதிபதிகள் ஆகியோர் செய்ய வேண்டிய வேலைகளை செய்தித் தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு ஊடகங்கள் மேற்கொண்டன.
 
     24 மணி நேரமும் செயல்படும் அவர்களுக்கு பரபரப்பான செய்திகள் வேண்டும் என்பதற்காக எல்லை மீறி நடக்கிறார்கள் என்றும், பரபட்சமாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே இந்தவகை ஊடகங்கள் மீது எழுந்துள்ளன.
 
     டெல்லி சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதில், காவலர் ஒருவர் மரணமடைந்தார். இது அவரது குடும்பத்துக்கு மிகப்பெரிய சோகம். காவல்துறைக்கு இழப்பு. ஆனால் அந்த போலீஸ்காரர் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்படவில்லை என்று கூற தொலைக்காட்சி சேனல்களுக்கு பல சாட்சிகள் கிடைத்தார்கள். ஆனால் அவர் தாக்குதலுக்கு உள்ளானார் என்று கூற அந்த தொலைக்காட்சிகளுக்கு ஒருவர் கூட கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக இவையெல்லாம் செய்தித் தொலைக்காட்சிகளுக்கான வேலை கிடையாது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
 
     இதுபோன்ற தொலைக்காட்சி சேனல்களை நடத்துவர்களின் கருணையை தேசமே எதிர்பார்க்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. இது போன்ற சேனல்களை நடத்துபவர்கள் குறுகிய நோக்கத்துடன் தங்கள் சுயநலத்துக்காக எதையும் செய்வார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும். அதே நேரத்தில் பத்திரிகைகள் இந்த விஷயத்தில் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டன என்று திக்விஜய் சிங் கூறினார். நன்றி, தூது

0 comments:

Post a Comment