Monday, December 24, 2012

டெல்லியில் தெருச் சண்டையாக மாறிய போராட்டம்!

 ஹிந்துத்துவா சக்திகளின் தலையீடே டெல்லி வன்முறைக்கு காரணம்!   24 Dec 2012
 
     புதுடெல்லி:பல்கலைக் கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு ஆளான சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்தும், அந்த மாணவிக்கு விரைவில் நீதி கிடைக்க வலியுறுத்தியும் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியா கேட் பகுதியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் விரட்டியடித்தனர். இந்த மோதலில் பெண்கள் உள்பட 68 பேரும் 78 போலீஸாரும் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
     மூன்றாவது நாளாக தலைநகரின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் வெடித்தது. இதையடுத்து இந்தியா கேட், நாடாளுமன்றச் சாலை, விஜய் சௌக் மற்றும் ராஜ்பாத் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
     இந்தியா கேட்டில் திரண்டிருந்தவர்களை போலீஸார் வெளியேற்றினர். சிலர் மோதலில் ஈடுபட்டதையடுத்து, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை போலீஸார் கலைத்தனர்.
 
     அதைத் தொடர்ந்து போலீஸார் மீது ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.
 
     பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை குண்டுக் கட்டாகத் தூக்கி போலீஸார் வெளியேற்றினர்.
 
     போராட்டம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, ஜந்தர் மந்தர், அசோகா சாலை, மான்சிங் சாலை, ஜன்பத், கஸ்தூர்பா காந்தி மார்க் உள்பட இந்தியா கேட்டை இணைக்கும் அனைத்து சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
 
     அந்த சாலைகளில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் அந்தச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து போலீஸார் அடக்குமுறை செய்வதாகக் கூறி, போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
     அங்கு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸார், அங்கிருந்தவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
 
     முன்னதாக, காலையில் விஜய் சௌக், இந்தியா கேட் பகுதியில் திரண்ட இளைஞர்களை போலீஸார் விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர் ராஜ்பாத் பகுதியில் குடியரசு தின விழாவுக்காக ராணுவத்தினரால் போடப்பட்டிருந்த தாற்காலிக இருக்கைகளைச் சேதப்படுத்தினர். குடியரசுத் தலைவர் மாளிகையை ஏராளமான மகளிர், இளைஞர் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை முற்றுகையிட்டதால் அந்தப் பகுதி நுழைவுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் தடுப்புக் கம்பிகள் போடப்பட்டிருந்தன.
 
     இந்தியா கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்களிடம் இந்தப் பகுதியில் போராட்டம் நடத்தக்கூடாது. “ராம்லீலா அல்லது ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துங்கள் என்று உயர்போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
     ஆனால், அதை பொருட்படுத்தாமல் இந்தியா கேட்டை சுற்றிலும் ஆயிரக்கணக்கில் மகளிர் அமைப்பினர், பாரதிய ஜனதா இளைஞர் அணியினர், ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் திரண்டனர்.
 
     போலீஸார் கேட்டுக் கொண்டதையடுத்து படேல் சௌக், சென்ட்ரல் செக்ரடேரியேட், உத்யோக் பவன், ரேஸ் கோர்ஸ் சாலை,கான் மார்க்கெட், பாராகம்பா, மண்டி ஹவுஸ் ஆகிய தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. அதன் காரணமாக அந்த இடங்களில் மெட்ரோ ரயில்கள் நிற்காமல் சென்றன. அது பற்றிய தகவல் முன்கூட்டியே அறிவிக்கப்படாததால் பயணிகள் பலரும் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
 
     இந்த நிலையில் விஜய் சௌக், ஜந்தர் மந்தர் சாலையை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்த வாகனங்களை ராம்லீலா மைதானம் அமைந்த சாலைக்கு போலீஸார் திருப்பி விட்டனர்.
 
     இதனால் போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் சிறு, சிறு குழுக்களாக இந்தியா கேட் பகுதிக்கு வந்தனர்.
 
     அங்கு வந்த ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து செல்லும்படி போலீஸார் கேட்டுக் கொண்டனர்.
 
     உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து ராம்தேவ் ஆதரவாளர்கள் வந்த 20 பேருந்துகளை பிரகதி மைதானம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் பேருந்து மீது ஏறி நின்றபடி தில்லி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்தியா கேட் வரும் ஆதரவாளர்களை போலீஸார் ஆங்காங்கே தடுத்து நிறுத்துவது குறித்து அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மாலை 5 மணியளவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸார் மீது சிலர் கற்களை வீசினர். அங்கிருந்தவர்களை கலைந்து செல்லும்படி போலீஸார் உத்தரவிட்டனர்.
 
     அதையும் மீறி அங்கேயே நின்றிருந்தவர்கள் மீது, போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். கூட்டத்தைக் கலைக்க தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.  மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இன்றைய சம்பவத்தை அடுத்து நகரின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
      இந்நிலையில், மாணவிக்கு மீண்டும் செயற்கை சுவாசம்:
 
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவிக்கு ஞாயிற்றுக்கிழமை சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், மீண்டும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக சஃப்தர்ஜங் மருத்துவர்கள் தெரிவித்தனர். நன்றி, தூது

0 comments:

Post a Comment