Saturday, December 22, 2012

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு! – பா.ஜ.க, சமாஜ்வாதி கட்சி முட்டுக்கட்டை!

SC-ST promotion quota bill   21 Dec 2012       
 
     புதுடெல்லி:பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா தொடர்பாக சமாஜ்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளில் மக்களவை முடங்கியது. இந்தப் பிரச்னை காரணமாக தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
 
     பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா (117வது திருத்தம்) 2012 திங்கள்கிழமை மாநிலங்களவையில் நிறைவேறியது. புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்ய முயன்றபோது, மசோதா நகலை அமைச்சர் நாராயணசாமியிடமிருந்து சமாஜ்வாதி எம்.பி. யஷ்வீர் சிங் பறித்ததால் அமளி நிலவியது. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
 
     வியாழக்கிழமை நண்பகலில் மத்திய அமைச்சர் நாராயணசாமி இட ஒதுக்கீட்டு மசோதாவை மீண்டும் விவாதத்துக்குக் கொண்டுவந்தார். காங்கிரஸ் உறுப்பினர் பி.எல். புனியா மசோதா குறித்து பேசத் தொடங்கினார். அப்போது, சமாஜ்வாதி எம்.பி.க்கள் எழுந்து மசோதாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தபோதும், மக்களவையில் இந்த மசோதா குறித்து விவாதிக்க பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அனுமதி கோரினார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக உறுப்பினர்கள், முக்கிய எதிர்க்கட்சியை இந்த அவை அவமதித்து விட்டதாகக் குற்றம்சாட்டினர்.
 
    மேலும், அத்வானியும் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார். இதுதொடர்பாக தம்மிடம் பேச வந்த மத்திய பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல் நாத் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி மீது கோபத்தை வெளிப்படுத்தினார்.
 
    அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 1.15 மணிக்கு மீண்டும் அவை கூடியது. அப்போது, அவையின் மையப் பகுதிக்கு வந்த பாஜக உறுப்பினர்கள் எதிர்க்கட்சியை அவமானப்படுத்தியதை பொறுத்துக் கொள்ள முடியாது என கோஷம் எழுப்பினர். இதனிடையே, காங்கிரஸ் உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இதனால் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.
 
    மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், கமல் நாத் மற்றும் குமாரி செல்ஜா, காங்கிரஸ் உறுப்பினர் கிரிஜா வியாஸ் உள்ளிட்டோர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகியோரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. அடுத்தடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டு கூடியபோதும் கூச்சல் குழப்பம் நீடித்தது. இதையடுத்து, மக்களவைத் தலைவர் மீரா குமார் 5.30 மணியளவில் அவையை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

0 comments:

Post a Comment