24 Dec 2012
இம்பால்:காலவரையற்ற முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் மணிப்பூரில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். சாலையில் வைத்திருந்த தடைகளை அப்புறப்படுத்த வந்த போலீசார் மீது கல்வீச்சு நடந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ப்ரைம் நியூஸ் பத்திரிகையின் செய்தியாளர் நானோசிங்கின்(29) நெஞ்சில் குண்டு பாய்ந்தது.இதனைத் தொடர்ந்து அவர் ரீஜினல் இன்ஸ்ட்யூட் ஆஃப் மெடிக்கல் சயன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் மரணமடைந்தார்.
மணிப்பூரின் சந்தேல் மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதியன்று நடந்த ஒரு இசை நடன நிகழ்ச்சியின்போது நாகா ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர் ஒருவரால் பொது இடத்தில் வைத்து பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக மணிப்பூரி திரைப்பட நடிகை மொமோகோ கூறியதை அடுத்து அந்நபர் கைது செய்யப்பட வேண்டுமெனக் கோரி மணிப்பூரில் ஆர்ப்பாட்டங்களும் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றுவருகிறது.
பத்திரிகையாளர் கொல்லப்பட்ட தகவல் வெளியானதை தொடர்ந்து மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இம்பால் ஈஸ்ட், வெஸ்ட் மாவட்டங்களில் அதிகமான வன்முறைகள் நிகழ்ந்துள்ளன.இவ்விடங்களில் 16 மணிநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் அனைத்து சாலைகளும் முழு அடைப்பு ஆதரவாளர்களால் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.நான்கு அரசு வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.இம்பா ல் வெஸ்ட் மாவட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீஸ் கண்ணீர் புகையை பிரயோகித்தது. சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக் கிழமை காலை வரை இம்பால் ஈஸ்ட், வெஸ்ட் மாவட்டங்களில் 11 மணிநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டிருந்தது.வன்முறைகள் ஏற்பட்டதை தொடர்ந்து 16 மணிநேர ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
மாநில உள்துறை அமைச்சர் கெய்கன்வாம், மருத்துவமனைக்குச் சென்று பத்திரிகையாளரின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி காக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார். நன்றி, தூது
0 comments:
Post a Comment