Tuesday, December 18, 2012

தமிழகத்தில் சாலையில் சைக்கிள் ஓட்டிகள் உயிரிழப்பு அதிகம்!

        தமிழகத்தில் சாலையில் சைக்கிள் ஓட்டிகள் உயிரிழப்பு அதிகம்!   18 Dec 2012
 
    புதுடெல்லி:இந்தியாவிலேயே சைக்கிள் ஓட்டுபவர்கள் சாலை விபத்துக்களில் சிக்கி இறக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை வகிப்பதாக மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
 
     வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தான் தமிழ்நாட்டை விட அதிக அளவில் சைக்கிள் ஓட்டுபவர்கள் விபத்துக்களில் உயிரிழந்திருக்கிறார்கள்.
 
     தமிழ் நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 1412 பேர் சைக்கிளில் பயணிக்கும் போது ஏற்பட்ட சாலை விபத்துக்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதாவது ஒரு நாளுக்கு நான்கு பேர் என்ற விகிதத்தில்.
 
     உத்தரப்பிரதேச மாநிலத்தில், கடந்த ஆண்டு 2,338 பேர் சைக்கிளில் பயணம் செய்யும்போது விபத்துக்களில் சிக்கி இறந்திருக்கிறார்கள்.
 
     தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சைக்கிள் ஓட்டுபவர்களுக்கென்று சாலைகளில் தனியாக ஒதுக்கப்பட்ட வழிகள் இல்லாத்தே, இந்த அளவு அதிக எண்ணிக்கையில் சைக்கிள் பயணிகள் விபத்தில் சிக்கி இறப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்று தமிழ் நாடு சைக்கிளிங் சங்கத்தின் செயலர் எஸ்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
 
     அது போல சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது பற்றிய போதிய அளவு பயிற்சியின்மையும் ஒரு காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
 
     அரசைப் பொறுத்தவரை சுற்றுச்சூழல் மற்றும் உடல் நல காரணங்களுக்காக, சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று சைக்கிளிங் அமைப்புகள் வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

0 comments:

Post a Comment