17 Dec 2012
அஹ்மதாபாத்:’நான் சத்தியத்திற்காக போராடுகிறேன்! ஆகையால் நான் தோல்வியுறுவது சத்தியத்தின் தோல்வியாக மாறும்!’- இந்த வார்த்தைகளைகூறும் பொழுது சுவேதா பட்டின் கண்களில் தன்னம்பிக்கையின் ஒளி தென்படுகிறது.
குஜராத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய்பட்டின் மனைவியும், மணிநகர் தொகுதியில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுபவருமான சுவேதா பட் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டு தேஜஸ் பிரதிநிதிக்கு பேட்டி அளித்தார்.
சுவேதா பட் கூறியது: குஜராத் இனப்படுகொலை தொடர்பான உண்மையை வெளிக்கொணர்ந்ததால் எனது கணவர் மோடியால் அவதிக்கு உள்ளானார். குஜராத்தில் அனைவரும் பயந்து வாழுகின்றனர். மக்கள் சத்தியத்தை கூற அஞ்சுகின்றார்கள். அவர்களால் சுதந்திரமாக சிந்திக்க கூட முடியவில்லை. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. குண்டர்களின் ராஜ்ஜியம்தான் குஜராத்தில் நடக்கிறது.
மோடியின் சொந்த தொகுதியான மணிநகரில் குண்டர்கள் இரவு நேரங்களில் சுதந்திரமாக பைக்குகளில் சுற்றுவதை காணலாம். கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி தனது சொந்த தொகுதிக்கு வந்ததில்லை. அவருக்கு அவரது சொந்த காரியங்களில் மட்டுமே ஆர்வம் உள்ளது. எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்ணாடியும், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குர்தாவையும் மோடி அணிகிறார்.
தனிப்பட்ட காரியங்களுக்காக பொதுமக்களின் பணத்தை வீணடிக்கிறார். ஒருமுறை அணிந்த ஆடையை மீண்டும் அணியாத மோடிதான் தான் ஒரு சாதாரண மனிதன் என்று கூறுகிறார். ஏன் மோடிக்கு எதிராக போட்டியிடுகின்றீர்கள்? என்ற கேள்விக்கு சுவேதா பட் அளித்த பதில்: வெறும் ஒரு இல்லத்தரசியான எனக்கு ஒரு சட்டப்பேரவை தொகுதியில் வெற்றிப்பெற்றுவிட வேண்டும் என்ற மோகம் ஒன்றும் இல்லை.
ஆனால், மோடி விரும்பாத சத்தியத்தின் பக்கம் எனது கணவர் நின்றதற்காக எனது குடும்பம் துயரங்களை அனுபவிக்கும் சூழல் உருவானது. கடந்த 3 ஆண்டுகளாக சஞ்சீவ், அரசுக்கு எதிராக போராடி வருகிறார். ஆகையால்தான் மோடியும், அவரது ஆட்களும் எனது குடும்பத்தை வேட்டையாடுகின்றார்கள். அடிக்கடி, மோடி 40 அல்லது 50 பேரைக் கொண்ட கும்பலை எனது வீட்டை சோதனையிட அனுப்புவார்.
இது ஐந்து அல்லது ஆறு மணிநேரங்கள் நீடிக்கும். எனது கணவரின் தாயாரின் வீட்டில் கூட அவர்கள் புகுந்துள்ளனர். எங்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. எங்களது குடும்பம் அனைத்தும் கண்காணிப்பில் உள்ளது. மோடியின் நடவடிக்கைகள் சட்டத்தின் அனைத்து வரம்புகளையும் மீறியதாகும். இதனை நான் உணர்ந்த பொழுது எதிர்த்துப் போராட தீர்மானித்தேன்.
தேர்தலில் சந்தித்த நெருக்கடிகளை குறித்த கேள்விக்கு பதில் அளித்த சுவேதா பட் கூறியது: நான் தேர்தல் பிரச்சாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு செல்லும் போது எதுவுமே கிடைக்காது. மேட், டெண்ட், மைக், நாற்காலி போன்ற பொருட்களை வாங்க மார்க்கெட் சென்றால் எதுவுமே இருப்பு இல்லை என்று வியாபாரிகள் கூறுவார்கள்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு தேவையான பொருட்களை எனக்கு விற்பனை செய்ய எந்த வியாபாரிக்கும் தைரியம் இல்லை. கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மோடிக்காக அனைத்து அரசு இயந்திரங்களும் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்று சுவேதா பட் குற்றம் சாட்டினார்.
வெற்றியைக் குறித்து கேள்வி எழுப்பியபோது சுவேதா பட் அளித்த பதில்: என்னை ஆதரிக்கும் ஏராளமானோரை நான் சந்தித்தேன். 24 ஆண்டுகள் குடும்பத்தலைவியாக இருந்த நான் வெளியே இறங்கி மோடிக்கு எதிராக போராட முடியுமென்றால், மக்களாலும் பயமில்லாமல் சத்தியத்திற்கு உறுதுணையாக இருக்க முடியும். எனக்கு பெரிய விருப்பங்கள் எதுவும் இல்லை. ஆனால், சத்தியம் வெற்றிப் பெறவேண்டும். மோடி தெய்வத்தின் அவதாரம் ஒன்றுமில்லை. அவர் ஒரு அரசியல்வாதி. ஆகையால் அவரை அரசியல்ரீதியாக மட்டுமே தகர்க்க முடியும். அதற்காகவே எனது போராட்டம் என்று சுவேதா பட் கூறினார். துவக்கத்தில் சுவேதா பட் சுயேட்சையாக போட்டியிடவே விரும்பியுள்ளார்.
ஆனால், காங்கிரஸ் கட்சி சீட் வழங்க வாக்குறுதி அளித்த போது, பிரச்சாரம் மற்றும் இதர வாய்ப்புகளுக்காக காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட அவர் ஒப்புக்கொண்டுள்ளார். நன்றி தூது
0 comments:
Post a Comment