27 Dec 2012
புதுடெல்லி:டெல்லியில் பெண் ஒருவர் ஒடும் பேருந்தில், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்பாட்டங்களில் நடந்த வன்முறையின் போது, காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளன. வன்முறை கும்பலால் தாக்கப்பட்டதால் தான் அவர் உயிரிழந்தார் என்றும், தலையிலும், வயிற்றிலும் காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில், அந்த நிலைப்பாட்டை ஒருதரப்பினர் மறுக்கிறார்கள்.
உயிரிழந்த கான்ஸ்டபிள் சுபாஷ் சந்த் தோமருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும், அவர் மாரடைப்பால்தான் உயிரிழந்ததாகவும், சம்பவத்தை நேரில் பார்த்த, அந்தக் காவலருக்கு உதவி செய்ய முயன்றதாக கூறும் ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் தெரிவித்துள்ளனர். ஊடகத்துறை மாணவர் யோகேந்திரா என்பவரும், அவரது தோழி பவோலைனும்தான் சுபாஷ் சந்தை மருத்துவமனையில் சேர்த்தவர்கள்.
போராட்டக்காரர்கள் தாக்கி அவர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறுவது தவறு என்று அவர்கள் கூறினர். ஆனால், சுபாஷ் சந்த் தோமரின் குடும்பத்தினர் அந்த வாதத்தை ஏற்க மறுக்கின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தனது தந்தையை கீழே தள்ளி, மிதித்துவிட்டு ஓடியதால் தான் படுகாயமடைந்து உயிரிழந்ததாக அவரது மகன் ஆதித்யா தோமர் கூறினார்.
டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது, தோமரின் நெஞ்சிலும், வயிற்றிலும் காயங்கள் இருந்ததாகவும் அதனால்தான் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். அதேநேரம், சுபாஷ் சந்த் அனுமதிக்கப்பட்டிருந்த ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் டி.எஸ். சித்து, “எங்களது ஆவணங்களின் அடிப்படையில், சிறிய காயங்களைத் தவிர காவலரின் உடலில் பெரிய காயங்கள் ஏதும் இல்லை.
ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தான் முழுமையான விவரம் தெரியும்’ என்றார். உயிரிழந்த சுபாஷ் சந்த் தோமரின் உடல் முழு அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை மாலை, பிரேத பரிசோதனை அறிக்கையை ஊடகங்ளுக்கு வெளியிட்டார் கூடுதல் காவல்துறை ஆணையர் திவேதி.
“கடுமையாகத் தாக்கப்பட்டதன் எதிரொலியாக கழுத்திலும், நெஞ்சிலும் காயங்கள் ஏற்பட்டு அதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்”, என்றார் கூடுதல் திவேதி.
காவலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, டெல்லியில் திடீரென நடந்த ஆர்ப்பாட்டம் போன்ற சம்பவங்களைக் கையாள தயாரான திட்டம் ஏதும் இல்லை என்றும், அவற்றை உருவாக்க வேண்டும் என்றும் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில், பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய விசாரணைக் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக சிதம்பரம் அறிவித்தார். நடந்த சம்பவம் தொடர்பாகவும், காவலரின் தவறுகள் ஏதாவது இருக்கிறதா என்பது குறித்தும், டெல்லி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டு முறைகள் குறித்தும் அந்த ஆணையம் மூன்று மாதங்களில் பரிந்துரை அளிக்கும் என்றும் சிதம்பரம் தெரிவித்தார். நன்றி, தூது
0 comments:
Post a Comment