19 Dec 2012
புதுடெல்லி: அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.
முஸ்லிம்களின் நிலைமை எஸ்.சி, எஸ்.டி பிரிவினரை விட மோசமாக உள்ளது என்று அவர் பூஜ்ஜிய வேளையில் தெரிவித்தார். முஸ்லிம்களின் நல்வாழ்வுக்காக ராஜேந்தர் சச்சார் மற்றும் ரங்கநாத் மிஷ்ரா தலைமையிலான இரண்டு கமிட்டிகள் சமர்ப்பித்த சிபாரிகளை அமல்படுத்துவதில் அரசு என்ன நடவடிக்கையை எடுத்தது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முஸ்லிம்களின் பரிதாபகரமான சூழல் சச்சார் கமிட்டி அறிக்கையில் சரியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். முலாயம் சிங்கின் கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரித்தனர்.
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கிடும் மசோதா மாநிலங்களவையில் நிறைவெற்றப்பட்ட மறு தினம் முலாயம்சிங் யாதவ் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதத்தின் பெயரால் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்று சி.பி.எம் உறுப்பினர் ஸைதுல் ஹக் தெரிவித்தார். பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு இறுதியில் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்கி அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், சச்சார், ரங்கநாத் மிஷ்ரா கமிட்டிகளின் அறிக்கைகளில் கூறப்பட்ட பரிந்துரைகள் பலவற்றையும் அரசு அமல்படுத்திவிட்டதாகவும், இடஒதுக்கீடு உள்ளிட்ட சில பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் கூறினார்.
0 comments:
Post a Comment