20 Dec 2012
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நகலை அமைச்சர் வி. நாராயணசாமியின் கையிலிருந்து சமாஜவாதி எம்.பி. பறித்ததால் மக்களவையில் அமளி ஏற்பட்டது.
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா புதன்கிழமை மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததது. இதையடுத்து, மக்களவை கூடியதும் இந்த மசோதாவுக்கு எதிராக சமாஜவாதி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையே பிற்பகலில், பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான அமைச்சர் வி.நாராயணசாமி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை தாக்கல் செய்ய முயன்றார்.
அப்போது, அமைச்சரின் இருக்கையை நோக்கி வந்த சமாஜவாதி கட்சி உறுப்பினர் நாகினா யஷ்வீர் சிங், மசோதா நகலைப் பறித்தார். பின்னர், அதை தனது கட்சி எம்.பி. நீரஜ் சேகரிடம் வழங்கினார். அது தவறி கீழே விழுந்தது.
இதற்கிடையே, முன் வரிசையில் அமர்ந்திருந்த சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் உறுப்பினர்கள் யஷ்வீர் சிங்கிடமிருந்த அந்த நகலைப் பறிக்க முயன்றனர்.
சமாஜவாதி எம்.பி.க்கள் அனைவரும் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூச்சல் குழப்பம் நிலவியதால் மக்களவைத் தலைவர் மீரா குமார் அவையை ஒத்தி வைத்தார். பின்னர் அவை மீண்டும் கூடியதும் இதே நிலை நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் பாராளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், இட ஒதுக்கீடு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், மக்களவையில் தனது கட்சி எம்.பி.யை காங்கிரஸ் உறுப்பினர்கள் அவமதித்ததாக குற்றம் சாட்டினார்.
முன்னதாக மாநிலங்களைவையில் இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கு சமாஜவாதி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், இது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பாலான உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.இதையடுத்து, மாநிலங்களவையில் நிறைவேறியது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி செய்தியாளர்களை சந்தித்த போது, சமாஜ்வாதிக் கட்சியுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் இட ஒதுக்கீடு மசோதா வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படுமா? என கேட்டனர். அதற்கு அவர் கூறியது:
மக்களவையில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது. மசோதா நகலைப் பறிக்கும் சம்பவம் நடைபெறுவது முதன்முறை அல்ல. எந்த ஒரு பிரச்னையிலும் ஜனநாயக முறைப்படி தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க பல்வேறு வழிகள் உள்ளன.
அதைக் கடைபிடிக்க வேண்டியது உறுப்பினர்களின் கடமை. அதே நேரம், இந்தப் பிரச்னை குறித்து சமாஜவாதி கட்சியுடன் தொடந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஜனநாயக நடைமுறைகளை பாதிக்கும் வகையில் நடைபெறும் எத்தகைய செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது . அதே நேரம் தொடர்ந்து சமாஜ் வாதி கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவோம். அதற்காக அவர்களது செயலை மன்னித்து விட்டதாக அர்த்தம் இல்லை என்றார்.
0 comments:
Post a Comment