22 Dec 2012
புதுடெல்லி:பாலியல் வன்புணர்வு வழக்குகளிலும், பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளிலும் சிக்கியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் டிக்கெட் வழங்குவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. டெல்லி பாரா மெடிக்கல் மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சியையும், கவலையையும் வெளியிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் கபட நாடகத்தை சுட்டிக்காடி ஜனநாயக சீர்திருத்தங்களுக்காக போராடும் எ.டி.ஆர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2007-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டவர்களின் விண்ணப்பங்களை பரிசோதித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட 260 கிரிமினல்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
இதில் 20 பேர் பாலியல் வன்புணர்வு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆவர். பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கியதில் முன்னிலை வகிப்பது காங்கிரஸ் கட்சி ஆகும். அக்கட்சி 26 கிரிமினல்களுக்கு டிக்கெட் வழங்கியுள்ளது.
எதிர்கட்சியான பா.ஜ.க 24 கிரிமினல்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. 18 மற்றும் 19 கிரிமினல்களுக்கு டிக்கெட் வழங்கிய பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதிக் கட்சியும் முறையே 3 மற்றும் 4-வது இடங்களை பிடித்துள்ளன.
மஹராஷ்ட்ரா மாநிலத்தில் தான் 47 கிரிமினல்களுக்கு தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் டிக்கெட் வழங்கியுள்ளன. 37 கிரிமினல்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்ட உ.பி 2-வது இடத்தையும், 22 கிரிமினல்களுக்கு டிக்கெட் வழங்கிய மே.வங்காளம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் மட்டுமின்றி 2009-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல்களுக்கும் அரசியல் கட்சிகள் போட்டியிட டிக்கெட் வழங்கியுள்ளன.
அத்தேர்தலில் பாலியல் வன்புணர்வு வழக்கில் சிக்கிய 6 கிரிமினல்களுக்கு போட்டியிட டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான இதர வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 34 பேருக்கும் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் இத்தகைய கிரிமினல்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்க கூடாது என்றும், அவர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் வெளியேற்ற வேண்டும் எனவும் ஏ.டி.ஆர் கோரிக்கை விடுத்துள்ளது.
0 comments:
Post a Comment