Thursday, December 27, 2012

குஜராத் தேர்தலில் முறைகேடு: ஷப்னம் ஹாஷ்மி குற்றச்சாட்டு!

 sapnam hashmi    27 Dec 2012
 
     புதுடெல்லி:குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், சி.ஐ.ஏ உள்ளிட்ட அமெரிக்க ஏஜன்சிகளுக்கு இதில் பங்கிருப்பதாகவும் பிரபல மனித உரிமை ஆர்வலரும், அரசு சாரா அமைப்பான அன்ஹதின் தலைவருமான ஷப்னம் ஹாஷ்மி குற்றம் சாட்டியுள்ளார்.
 
     இதுக் குறித்து அவர் டெல்லி கான்ஸ்டியூசன் க்ளப்பில் டெபுட்டி ஸ்பீக்கர்ஸ் ஹாலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது: டிசம்பர் 15 மற்றும் 17-ம் தேதிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். ஏழ்மையும், குடிநீர் தட்டுப்பாடும், ஆரோக்கிய பிரச்சனைகளையும் அனுபவிக்கும் கிராம மக்கள் இத்தேர்தலில் ஒன்று திரண்டு மோடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
 
     பிரச்சாரத்திற்கு இறங்கிய ஒரு மாதமும் மோடி அச்சத்துடன் காணப்பட்டார். முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஏராளமான கோப்புகள்(ஃபைல்கள்) மோடியின் அலுவலகத்தில் இருந்து மாற்றப்பட்டதாக ஊடகங்களும் தெரிவித்திருந்தன. ஆனால், 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்து டிசம்பர் 17-ஆம் தேதி மோடி தன்னம்பிக்கையுடன் தான் வெற்றிப்பெறுவேன் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
 
     டிசம்பர் 15 மற்றும் டிசம்பர் 17-ஆம் தேதிக்கு இடையே நிகழ்ந்த சில சம்பவங்கள் தாம் மோடி இவ்வாறு அறிவிக்க தூண்டியது. 20 தொகுதிகளில் நடந்த வாக்கெடுப்பில் மோசடி நடந்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். தேர்தல் முடிவுகள் வந்த வேளையில் காங்கிரஸ் கட்சி உறுதியாக வெற்றிப் பெறும் என கருதப்பட்ட 20 தொகுதிகளில் அக்கட்சி தோல்வியை தழுவியது.
 
     எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்களின் ப்ரோக்ராமில் மோசடி நடந்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எதிர்காலத்தில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தடை ஏற்படுத்த வேண்டும். சில அமெரிக்க பிரதிநிதிகள் தேர்தலுக்கு சற்று முன்பாக குஜராத்தில் முகாமிட்டு என்ன செய்தனர் என்பதை வெளியிட வேண்டும். இவ்வாறு ஷப்னம் ஹாஷ்மி கூறினார்.
 
     குஜராத்தில் தேர்தலின்போது நரேந்திர மோடிக்கு எதிராக ’போலே குஜராத்’ என்ற பிரச்சாரத்தை ஷப்னம் ஹாஷ்மி நடத்தி வந்தார். நன்றி, தூது

0 comments:

Post a Comment