Thursday, January 3, 2013

பாலியல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை: எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கக்கோரும் வழக்கு – உச்சநீதிமன்றம் ஏற்பு!

3 Jan 2013 SC takes a dim view of criminal MPs, MLAs
 
     படெல்லி:பாலியல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி புரோமளா சங்கர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது;
     “பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரணை நடத்தி அவர்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கச் செய்யவேண்டும். இதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும். ஈவ்டீசிங் குற்றம் செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 30 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை மத்திய, மாநில அரசுகள் உடனே அமல்படுத்த வேண்டும். சில மாநிலங்களில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
     டெல்லி மாணவிக்கு ஏற்பட்ட கொடுமை போல, ஏராளமான மலைவாழ் இன பெண்களும் கடத்தி பலாதகாரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த மனு நாளை முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.
 
     இதற்கிடையே பெண்கள் பாதுகாப்பு தொடர்பான மேலும் ஒரு பொது நலன் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய அமர்வு,பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய – மாநில அரசுகள் தெரிவிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. நன்றி, தூது

0 comments:

Post a Comment