Wednesday, January 2, 2013

கூடங்குளம் அணு உலை வால்வுகளில் கசிவா? புதிய சர்ச்சை!

2 Jan 2013           Kudankulam nuclear plant
 
    பாண்டிச்சேரி:கூடங்குளம் அணு உலையில் உள்ள வால்வுகளில் ஏற்பட்டிருந்த கசிவு சரி செய்யப்பட்டுவிட்டதால், விரைவில் மின்சார உற்பத்தி தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பம் கொண்டது என மத்திய அரசு சார்பிலும், அணுசக்தி நிர்வாகம் சார்பிலும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அமைச்சரின் இந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
     கூடங்குளத்தில் ஆறு அணு உலைகள் ரஷ்ய நாட்டு தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படவுள்ளன. அதன் முதல்கட்டமாக இரண்டு அணு உலைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முதல் அணு உலையில் பணிகள் முடிவடைந்து எரிபொருள் நிரப்பும் பணியும் நடைபெற்றுள்ளதாக அணுசக்தி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு உலைகள் செயல்பட தடைவிதிக்கக் கோரிய வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு புறம் நடைபெற்று வரும் நிலையில், அணு உலைகள் வேண்டாம் என்பதை வலியுறுத்தி 500 நாட்களையும் கடந்து இடிந்தகரையில் பொதுமக்கள் தொடர் அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
    இந்நிலையில் புதுவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி, கூடங்குளத்தில் மின் உற்பத்தி தாமதமாவதற்கு காரணத்தை விளக்கினார். “கூடங்குளம் அணு உலையில் உள்ள 2 வால்வுகளில் கசிவு ஏற்ப்பட்டிருந்தது, அது முன்னரே கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த கசிவு சரி செய்யப்பட்டு விரைவில் மின்சார உற்பத்தி தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.
 
    மத்திய அமைச்சரின் இந்த கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வால்வுகளில் கசிவு ஏற்பட்டதாகக் கூறும் அமைச்சர் எந்த வால்வுகளில் கசிவு ஏற்பட்டன அவை எந்த அளவுக்கு அபாயகரமானது என்பதை விளக்க வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அணுஉலைகள் பாதுகாப்பு தொடர்பாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவைகளுக்கு கடும் எதிர்ப்பு உள்ள நிலையில், கூடங்குளம் அணுஉலை அமைப்பில் பிரச்சனை இருந்ததை அமைச்சர் நாராயணசாமி வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.
 
     இதற்கிடையில் கூடங்குளம் அணு உலை தொடர்பாக வெள்ளை அறிக்கை உடனடியாக வெளியிடவேண்டும் என அணுசக்திக்கு எதிரான அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. நன்றி, தூது

0 comments:

Post a Comment