Saturday, January 5, 2013

கூடங்குளம்:அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயாராகும் எதிர்ப்புக் குழு!

4 Jan 2013 அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயாராகும் எதிர்ப்புக் குழு!
 
     இடிந்தகரை:கூடங்குளம் அணு மின்நிலையத்தில் இரு வாரங்களில் மின் உற்பத்தி தொடங்கும் என இந்திய அணுசக்தி துறை தலைவர் ரத்தன்குமார் சின்ஹா கூறிய நிலையில் அணு உலைக்கு எதிரான இறுதிகட்ட போராட்டம் குறித்து வருகிற 13 ஆம் தேதியன்று முடிவெடுக்கப்படும் என்று அணு உலை எதிர்ப்புக் குழு அறிவித்துள்ளது.
 
     இன்னும் இரு வாரங்களில் கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என இந்திய அணுசக்தி துறை தலைவர் ரத்தன்குமார் சின்ஹா தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில்,இந்த அறிவிப்பு அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
     இந்நிலையில் அணு உலைக்கு எதிராக இறுதிக்கட்ட போராட்டத்தில் இறங்க போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து அணு சக்திக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், “கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இறுதி தீர்ப்பு இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவுகளையும் அரசு பின்பற்றவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய மத்திய அமைச்சர் நாராயணசாமி, கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 2 வால்வுகளில் கசிவு ஏற்பட்டதாக கூறினார்.

     மின்உற்பத்தி பணி தொடங்குவதற்கு முன்கசிவு எற்பட்டது எப்படி என்பது தெரியவில்லை. ஆகவே கசிவு ஏற்பட்டது குறித்து வெள்ளைஅறிக்கை வெளியிடவேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால் அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 2 வாரத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என அணுசக்தி துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

      மத்திய அமைச்சர் நாராயண சாமியோ, வருகிற 15 ஆம் தேதி மின் உற்பத்தி தொடங்கும் என கூறியுள்ளார். இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தை மதிக்காத செயல் ஆகும். ஆகவே நாங்கள் இறுதிக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய இடிந்தகரையில் வருகிற 13 ஆம் தேதி சமுதாயக் கூட்டம் நடத்துகிறோம்.

     இதில் பங்கேற்க கூத்தங்குளி, கூடுதாழை, உவரி, கூட்டப்புளி, தோமையார்புரம், இடிந்தகரை, பெருமணல் உள்ளிட்ட கடற்கரை கிராமத்தை சேர்ந்த அனைத்து மீனவர்கள் மற்றும் ஊர்த்தலைவர்களை ஒன்று திரட்டி ஆலோனை நடத்தி இறுதிக்கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கிறோம்” என்றார். போராட்டக்குழு தலைவர் உதயகுமாரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கூடங்குளம் பகுதியில் மீண்டும் போராட்ட மேகங்கள் சூழத் தொடங்கி உள்ளன.

0 comments:

Post a Comment