Wednesday, January 2, 2013

திப்புசுல்தானின் ஏவுகணைக்கு டி.ஆர்.டி.ஓ அங்கீகாரம்!

2 Jan 2013 Cannon used by Tippu Sultan’s forces at the battle of Seringapatam 1799
 
     புதுடெல்லி:பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கடைசி வரை போராடி வீரமரணம் அடைந்த மாவீரன் திப்புசுல்தானின் போர் நவீன தொழில்நுட்பத்திற்கு நீண்ட காலத்திற்கு பிறகு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
 
     உலக போர் வரலாற்றிலேயே எதிரிகளுக்கு எதிராக முதன் முதலாக இரும்பால் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை பயன்படுத்திய திப்புவின் ஸ்ரீரங்கப் பட்டினத்தில் உள்ள கோட்டையின் சிதிலங்களை டிஃபன்ஸ் ரிசர்ச் டெவலப்மெண்ட் ஆர்கனைசேசனின்(டி.ஆர்.டி.ஓ) குழு சென்று பார்வையிட்டது.
 
      18-ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் நவீன தொழில் நுட்பம் இதர நாடுகளை விட வளர்ச்சி அடைந்திருந்தது என்பதற்கான ஆதாரம் தான் திப்புவின் ஏவுகணை தொழில்நுட்பம் என்று டி.ஆர்.டி.ஓ சீஃப் கண்ட்ரோலர் டாக்டர் டபிள்யூ.செல்வமூர்த்தி கூறினார். கோட்டை மற்றும் ராக்கெட் கோர்ட் ரூம் ஆகியவற்றை ஏவுகணை அருங்காட்சியமாக மாற்ற அவர் சிபாரிசு செய்துள்ளார். நவீன ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தையாகவும் திப்பு சுல்தான் கருதப்படுகிறார். 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டீஷாருடன் நடந்த போரில் 2 கி.மீ தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்குவதற்கான ஏவுகணையை திப்புவின் ராணுவம் தயாரித்திருந்தது. ஆனால், அந்த கோட்டை இன்று இடிந்துபோய் கிடக்கிறது.
 
     சட்டவிரோத ஆக்கிரமிப்புகளும் கோட்டையின் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண டி.ஆர்.டி.ஓ குழு, கர்நாடகா முதன்மை செயலாளருக்கும், ஆர்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியாவுக்கும், மாநில தொல்பொருள் ஆய்வு துறைக்கும் கடிதம் எழுதப்போவதாக அறிவித்துள்ளது.
 
     ராக்கெட் தொழில்நுட்பத்தின் அடிப்படை தத்துவங்கள் குடிக்கொண்டிருக்கும் இப்பகுதியை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இவ்வாறு கையாளுவது மிகவும் துயரமானது என்று டாக்டர் செல்வமூர்த்தி கூறினார். ஏவுகணை அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தானின் ராக்கெட்டை தவிர இந்தியாவின் பிரம்மோஸ், பிருத்வி,அக்னி உள்ளிட்ட அனைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளின் உருவங்கள் நிறுவப்படும் என்று செல்வமூர்த்தி மேலும் தெரிவித்தார். நன்றி, தூது

0 comments:

Post a Comment