Thursday, September 20, 2012

இறைத்தூதரை அவமதிக்கும் கார்ட்டூன்! – எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் பிரான்சு பத்திரிகை!

Policeman stands guard outside French satirical weekly "Charlie Hebdo" in Paris after it published controversial cartoons

பாரிஸ்:இஸ்லாத்தின் இறுதித்தூதரும், முஸ்லிம்கள் உயிரினும் மேலானவருமான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் காட்சிகள் உலக முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றும் செயலாக பிரான்சு நாட்டு பத்திரிகை ஒன்று இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் கார்ட்டூனை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உருவாக இருக்கும் கொந்தளிப்பை கவனத்தில் கொண்டு பிரான்சு அரசு 20க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை(வெள்ளிக்கிழமை) தமது தூதரகங்களையும், பள்ளிக்கூடங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது.
இறைத்தூதரை அவமதிக்கும் கார்ட்டூன் வெளியான சூழலில் வெள்ளிக்கிழமை பிரான்சு நாட்டு தூதகரங்கள் முற்றுகையிடப்படலாம் என கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூதரகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லாரண்ட் ஃபாபியஸ் தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளிலும் பிரான்சு நாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரான்சில் இருந்து வெளியாகும் சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகை நேற்று அட்டைப் படத்தில் ஹிட் திரைப்படமான The Untouchables ஐ கேலிச்செய்யும் வகையில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தது. ஒரு ரப்பி(யூத மதகுரு) ஒரு இமாமை வீல்சேருடன் தள்ளுகிறார். பின்னர் அவர் இருவரும் “mustn’t mock”(கேலி கூடாது)  என கூறும் வகையில் அந்த கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இன்னொரு கார்ட்டூன் இறைவனின் இறுதித்தூதரை மிகவும் இழிவுப்படுத்தும் வகையில் நிர்வாணமான ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.
இதே பத்திரிகை கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாத இதழில் அடுத்த இதழின் பிரதம ஆசிரியராக முஹம்மது நபி இருப்பார் என அறிவித்திருந்தது. அந்த இதழுக்கு இஸ்லாமியச் சட்டம் என்று அவ்விதழ் பெயரிட்டு வெளியிட்டிருந்தது. துனீசியாவில் அந்நஹ்ழா கட்சி வெற்றிப் பெற்றது மற்றும் கடாஃபிக்கு பின்னர் லிபியாவில் இஸ்லாமிய சட்டம் அமல்படுத்துவதைக் குறித்து கேலிச் செய்யும் வகையில் இந்த செய்தியை வெளியிட்டது. மேலும் இவ்விதழின் முகப்பில் ‘நீங்கள் சிரிக்காவிட்டால் 100 கசையடி’ என்று முஹம்மது நபி கூறுவது போல் படம் வரையப்பட்டிருந்தது. அதன் உட்பக்கங்களிலும் நபியை அவமதிக்கும் வகையில் கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. ஆனால், பத்திரிகை விற்பனைக்குச் செல்லும் முன்னரே அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பத்திரிகைகளும், உபகரணங்களும் தீக்கிரையாகின.
ஏற்கனவே 2007 ஆம் ஆண்டில் இதே பத்திரிகை முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் 12 கேலிச் சித்திரங்களை வெளியிட்டிருந்தது. இவை முதன்முதலாக டென்மார்க்கில் வெளியிடப்பட்ட போது முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். டென்மார்க் சித்திரத்தில் வெடிகுண்டு தலைப்பாகை அணிந்த உருவத்தை வரை நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் வெளியிட்டது. இந்தக் கேலிச்சித்திரத்திற்கு ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும்  கண்டனப் போராட்டங்கள் நடந்தன.
இறைத்தூதரை இழிவுப்படுத்தும் கார்ட்டூனை வெளியிட்டுள்ள சார்லி ஹெப்டோவுக்கு பிரான்சு நாட்டு பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிகைகள் பிரச்சனையை மேலும் மோசமடையச் செய்யாமல் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment