Friday, September 7, 2012

இந்தியாவின் 100-வது ராக்கெட் 9-ந் தேதி விண்ணில் பாய்கிறது! இன்று கவுண்ட் டவுன் தொடக்கம்


இந்திய வானவெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 1975-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி தனது முதல் வானவெளி பயணத்தை தொடங்கியது. அன்று, இஸ்ரோ நிறுவனம் தயாரித்த சொந்த செயற்கை கோளான ஆர்யபட்டாவை, ரஷியாவின் ராக்கெட்டில் வைத்து விண்ணில் செலுத்தியது.
 
அதன் பின்னர் பல்வேறு ஆராய்ச்சிகளை தொடர்ந்து நடத்தி 62 செயற்கை கோள்களையும், பிற நாடுகளின் செயற்கை கோள்களை தாங்கிச்செல்லும் 37 ராக்கெட்டுகளையும் 'இஸ்ரோ' விண்ணில் செலுத்தி உள்ளது.
 
9-ந் தேதி வானவெளியில் பாய இருக்கும் ராக்கெட் 'பி.எஸ்.எல்.வி.-சி21' ராக்கெட் இந்தியாவின் 100-வது ராக்கெட் ஆகும். இது, பிரான்ஸ் நாட்டின் 712 கிலோ எடையுள்ள 'ஸ்பாட்-6' என்கிற செயற்கை கோளையும், 15 கிலோ எடையுள்ள ஜப்பான் நாட்டின் செயற்கை கோளையும் ஏந்திச் செல்ல இருக்கிறது.
 
ஆகவே இது முழுக்க, முழுக்க வர்த்தக ரீதியான வானவெளி பயணம் ஆகும். இந்த ராக்கெட்டின் 51 மணி நேர 'கவுண்ட் டவுன்', இந்திய ராக்கெட் ஏவுதளங்களில் ஒன்றான ஸ்ரீஹரிகோட்டாவில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.51 மணிக்கு தொடங்குகிறது.
 
இந்த 'கவுண்ட் டவுன்' காலத்தில் ராக்கெட்டுக்கான திட மற்றும் திரவ எரிபொருள் நிரப்பும் பணிகள் நடைபெறும் என்று 'இஸ்ரோ' நிறுவனம் தெரிவித்தது. 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.51 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறிப் பாயும்.
 
இந்த ராக்கெட்டில் 2 செயற்கை கோள்கள் தவிர 6 மோட்டார்களும் இடம் பெற்று உள்ளன. இந்த 100-வது ராக்கெட் தனது வானவெளி பயணத்தை மேற்கொள்ளும் காட்சியை, 'இஸ்ரோ' விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்கும் பார்வையிட இருக்கிறார். 

0 comments:

Post a Comment