Monday, September 24, 2012

அஸ்ஸாம்:3-வது கட்டமாக 886 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியது ரிஹாப்!

3-வது கட்டமாக 886 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியது ரிஹாப்!

குவஹாத்தி:அஸ்ஸாமில் 3-வது கட்ட துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், சிராங், போங்கைகான் மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் 886 குடும்பங்களில் 3676 பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்தது.
முன்னர் முதல் 2 கட்டங்களில் ரூ.10 லட்சம் மதிப்புடைய புத்தாடைகள் ஈத் பெருநாளை முன்னிட்டு சிராங், போங்கைகான், பார்பெட்டா, கொக்ராஜர், துப்ரி மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் விநியோகம் செய்யப்பட்டன.
இந்த மாதம் 2-வது வாரத்தில் ரிஹாப் 3-வது கட்ட ஆய்வை நடத்தியது. அப்பொழுது 5 மாவட்டங்களில் உள்ள 171 அகதிகள் முகாம்களில் 129 முகாம்களில் தங்கியிருக்கும் 24,434 குடும்பங்களில் 99,160 பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணப்பொருட்கள் தேவை என்பது கண்டறியப்பட்டது.
ஈதுல் ஃபித்ர் பெருநாள் தினத்தில் ஈத்கா திடல்களில் பக்கெட்டுகளில் வசூலிக்கப்பட்ட ரூ.50 லட்சத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அஸ்ஸாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கியது. 3-வது கட்ட நிவாரணப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை, புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகள், குழந்தைகளுக்கான உணவுப்பொருட்கள், உணவுப் பாத்திரங்கள், பெண்களுக்கான ஆடைகள் ஆகியன எட்டு அகதிகள் முகாம்களில் ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்கள் விநியோகித்தனர். 886 குடும்பங்களைச் சார்ந்த 3676 பாதிக்கப்பட்ட நபர்கள் இதன் மூலம் பலனடைந்தனர். இரண்டு தினங்களாக நடைபெற்ற நிவாரணப்பொருட்கள் விநியோகத்தில் 1918 குடும்பங்களைச் சார்ந்த 8330 பாதிக்கப்பட்ட மக்கள் பலனடைந்தனர். கனத்த மழைக் காரணமாக நிவாரணப்பொருட்களை விநியோகிப்பதில் இடையூறு ஏற்பட்டாலும், அதனைப் பொருட்படுத்தாமல் ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்கள் அகதிகள் முகாமிற்கு சென்று நிவாரணப் பொருட்களை விநியோகித்தனர்.
3-வது கட்ட நிவாரணப் பொருட்களை வழங்கும் திட்டம் இம்மாதம் இறுதி வரை தொடரும். மீதமுள்ளப் பொருட்கள் அடுத்த கட்டமாக தேவைப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் என்று ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசனின் அஸ்ஸாம் மாநில துணைத் தலைவர் டாக்டர்.எ.பஷீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment