14 Sep 2012
சென்னை:இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாகானத்தில் வசித்து வரும் யூத இனத்தைச்சேர்ந்த ஷாம் பேசிலி என்ற திரைப்பட இயக்குனர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகர் ஆகிய இருவரும் ஒன்றினைந்து திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு 100க்கும் மேற்பட்ட யூதர்கள் நிதியுதவி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளையில் இத்திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் யூ ட்யூபில் பதிவு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் உலகம் முழுவதும் முஸ்லிம் சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு நாடுகளில் அமெரிக்காவை கண்டித்து பலவகையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. எகிப்து, லிபியா, யெமன், துனீசியா, பாகிஸ்தான், லெபனான், சூடான், இந்தியா, மொராக்கோ, ஃபலஸ்தீன், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
கெய்ரோவில் போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான மக்கள் காயமடைந்தனர். எகிப்தில் தொடர்ச்சியாக 2-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. யெமன் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்க தூதரகத்தில் அத்துமீறி நுழைந்தனர். தூதரகத்தில் நுழைந்த மக்களை வெளியேற்ற போலீஸ் முயன்ற போதிலும் தோல்வியை தழுவியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போலீஸ் – மக்கள் இடையே நிகழ்ந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். துனீசியாவில் அமெரிக்க தூதரகத்தை மூட வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க கொடிகளை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் எரித்தனர்.
இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட ஆஃப் இந்தியாவின் சார்பாக சென்னை அண்ணாசாலையிலுள்ள அமெரிக்க தூதரகத்தை நேற்று (13.09.2012) மாலை 4 மணியளவில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இம்முற்றுகை போராட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ .எஸ் .இஸ்மாயீல் அவர்கள் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக் முஹம்மது அன்சாரி , பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 350 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தில் “இத்திரைப்படத்தில் நடித்த 14 பேரை உலக நீதிபதிக்கு முன் நிறுத்தி தண்டனை கொடுக்க வேண்டும் , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அனைத்து முஸ்லிம்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் , இந்திய அரசு அமெரிக்க மற்றும் இஸ்ரேலுடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும் ” என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
மேலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று(வெள்ளிக்கிழமை) மாலையிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நாளை(சனிக்கிழமை) காலையிலும் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment