Wednesday, September 19, 2012

இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நடத்திய போர்! அதிர்ந்த சென்னை!(Video)


சென்னை: இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் உலகம் கொந்தளித்துப் போனது. பல்வேறு நாடுகளில்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவின் தென்கோடி பகுதியான தமிழகத்திலும் தினந்தோறும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் சென்னை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது.
இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் முன் இன்று 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இதனால் அமெரிக்க துணை தூதரகம்  3 நாட்களுக்கு மூடப்பட்டது. மேலும், தூதரகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டது.  மேலும் அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு அண்ணா சாலை தர்கா அருகே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அண்ணா சாலையில் இதுவரை எந்தப் போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டதில்லை.  மேலும் போராட்டத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் மாலை 3 மணி முதலே போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
அண்ணா சாலை முழுவதும் இஸ்லாமியர்கள் கொடிகளை ஏந்தியபடி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே அமெரிக்க தேசியக் கொடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் அண்ணா சாலை தர்கா அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அமெரிக்காவுக்கு எதிராக கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர்.
உலக மக்கள் அனைவருக்கும் உன்னத தத்துவங்களை போதித்த இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் இந்த திரைப்படம் இஸ்லாமியர்களின் மத உணர்வை  புண்படுத்தியிருப்பதால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும், இந்தியா தனது கண்டனத்தை பதிவுச் செய்ய வேண்டும் எனவும்  அவர்கள் வற்புறுத்தினர்.
20க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அங்கு குவிந்ததால் அண்ணா சாலை வரலாறு காணாத அளவுக்கு ஸ்தம்பித்தது.
இப்போராட்டத்தால் மயிலாப்பூர், ராயப்பேட்டை , அண்ணாசாலை ஆகிய தென்சென்னை பகுதிகள் ஸ்தம்பித்துப் போயிருந்தன. மேலும்  மத்திய சென்னை பகுதிகளான எழும்பூர், சிந்ததாரிப் பேட்டை வழியே பேருந்துகள் திருப்பிவிடப்பட்டதால் அந்தப் பக்கமும் வாகனங்களால் நிலைகுலைந்து போனது. சென்னையில் பல மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



1 comment:

  1. keep it up gud work abdul rahman kaka... by Riyas thunder graphics (editor)

    ReplyDelete