Monday, November 26, 2012

2 ஜி சி.ஏ.ஜி அறிக்கை: ஆர்.பி.சிங் பல்டி!

r-p-singh’s-doublespeak-on-cag’s-2g-report 
     புதுடெல்லி:பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு (ஜிஏசி) தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் வற்புறுத்தலின் பேரில்தான், சிஏஜி இழப்பை மதிப்பீடு செய்தார் என நான் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. ஆனால் நான் அவ்வாறு கூறவில்லை. பத்திரிகைகள் எனது கருத்தை திரித்து வெளியிட்டுள்ளன என்று சிஏஜி அமைப்பின் முன்னாள் அதிகாரி ஆர்.பி. சிங் பல்டியடித்துள்ளார்.

    சிஏஜி முன்னாள் அதிகாரியான ஆர்.பி.சிங், 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த தணிக்கைக் குழுவுக்கு தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற அவர், 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தாம் குறிப்பிடவில்லை என்றும், பிஏசியின் ஆலோசனைப்படி சிஏஜி வினோத் ராய்தான் இழப்பை குறிப்பிட்டு அதில் கையெழுத்திடச் சொன்னார் என்றும் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

     ஊழல் குற்றச்சாட்டை மறைக்க காங்கிரஸ் கட்சி ஆர்.பி.சிங்கை உபயோகிப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டியது. இந்நிலையில் தனது முந்தைய கருத்தில் இருந்து திடீரென பல்டியடித்துள்ளார் ஆர்.பி.சிங்.
இதுக் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியது:

    “2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக நான் தெரிவித்த கருத்துக்கு அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. நடந்த உண்மையைத்தான் சொன்னேன். காங்கிரஸ் கட்சியின் தூண்டுதல் காரணமாகவே கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறேன்.

    குறிப்பாக,காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடன் எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை.
ஏலம் நடத்தாமல் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் குறிப்பிட்ட தொகை இழப்பு ஏற்பட்டதாக வரைவு அறிக்கையில் மதிப்பிடப்பட்டிருந்தது.

     அந்தத் தொகையை நான் நீக்கினேன். ஆனால், இறுதி அறிக்கையில் அந்தத் தொகை சேர்க்கப்பட்டிருந்தது. எனினும், அதில் நான் கையெழுத்திட வேண்டிதாயிற்று.

     அதேநேரம், நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (ஜிஏசி) தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் வற்புறுத்தலின் பேரில்தான், சிஏஜி இழப்பை மதிப்பீடு செய்தார் என நான் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. ஆனால் நான் அவ்வாறு கூறவில்லை. பத்திரிகைகள் எனது கருத்தை திரித்து வெளியிட்டுள்ளன என்றார் சிங்.

     மேலும், பணியிலிருந்து ஓய்வு பெற்று 14 மாதங்கள் கழித்து இந்தத் தகவலை வெளியிட வேண்டிய அவசியம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் ஆர்.பி.சிங் கூறியது:
சமீபத்தில் நடைபெற்ற 2 ஜி ஏலத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காத நிலையில், சிஏஜி அறிக்கையில் இழப்பை எப்படி மதிப்பிட்டீர்கள் என கேட்டதால் உண்மை நிலையை விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றார் அவர். நன்றி, தூது

0 comments:

Post a Comment