மிரட்டுதல், பரிசுப்பொருட்கள், வேலைவாய்ப்பு ஆகியவற்றைக் கூறி மதமாற்றம் செய்வதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த மனுவை பாஜகவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் அவர் கூறுகையில் “ நீண்ட ஆண்டுகளாக இந்தியா மதமாற்ற சம்பவங்களுக்குப் பலியாகி வருகிறது. சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள், குறிப்பாக எஸ்சி,எஸ்டி மக்கள், அவர்களின் பிள்ளைகள், ஆண்கள் , பெண்கள் மதமாற்றத்துக்குள்ளாவதைத் தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை.
மிரட்டுதல், அச்சுறுத்துதல், பரிசுப்பொருட்கள், வேலைவாய்ப்பு வழங்குதல் போன்ற பல்வேறு வழிகள் மூலம் இவர்கள் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்.
இந்த நாட்டில் ஒரு மாவட்டம் கூட மந்திர வேலைகள் மூடநம்பிக்கைகள், மதமாற்றம் இல்லாமல் இருப்பதில்லை. நாடுமுழுவதும் ஒவ்வொரு வாரமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதைத் தடுக்க மத்திய அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
கடந்த் 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின்படி 86 சதவீதம் இருந்த இந்துக்கள் 79 சதவீதமாகக் குறைந்துவிட்டனர். பல்வேறு அமைப்புகள் , தனநபர்கள் கிராமங்களுக்குச் சென்று எஸ்டி, எஸ்சிபிரிவு மக்களை மதமாற்றி வருவது அச்சமடையச் செய்துள்ளது. கடந்த 20ஆண்டுகளாக பட்டியலினத்தவர்கள், பழங்குடிகள் இடையே மதமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது.
ஆதலால், ஏற்கெனவே வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மதமாற்றத்தைத் தடுக்க ஒருகுழுவை மத்திய அரசு அமைக்க உத்தரவிட வேண்டும். மூடநம்பிக்கைகள், மாந்தரீக வேலைகள், மதமாற்றம் ஆகியவை குறித்து விரிவான அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் தாக்கல் செய்யவும் உத்தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோஹின்டன் எப் நாரிமன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது.
இந்த மனுவை மீது கடும் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் அமர்வு, இதுபோன்ற பொதுநல மனுவை தாக்கல் செய்தால் வருங்காலத்தில் கடும் அபராதம் விதிக்க நேரிடும் என்று மனுதாரர் அஸ்வினி உபாத்யாயேவுக்கு எச்சரித்தனர். இதையடுத்து, அஸ்வின் உபாத்யாயே மனுவை திரும்பப் பெற்றார்.
0 comments:
Post a Comment