Saturday, December 3, 2011

ராஜீவ் கொலை: தினமலர் செய்தியாளருக்கு அடி, உதை!



சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி மனித வெடிகுண்டுகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தூக்குதண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். ஆனால் இந்த கருணை மனு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தமிழின ஆதரவாளர்கள் அவர்களின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களையும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடும் செய்துள்ளனர். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூரை சேர்ந்த மக்கள் மன்றத்தை சேர்ந்த செங்கொடி என்ற பெண்மணி ராஜூவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சாந்தன், பேரரறிவாளன் மற்றும் முருகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி கடந்த ஆகஸ்டு மாதம் 28ந் தேதி தீக்குளித்து இறந்தார். இது தமிழின ஆதரவாளர்களின் போராட்டத்தை வலுப்படுத்தியது. இதற்கிடையே தீக்குளித்து இறந்த பெண் செங்கொடி தவறான நடத்தை கொண்டவர் என்றும் விஷயம் வெளியில் தெரிந்துவிட்டதால் தீக்குளித்து இறந்து விட்டார். ஆனால் தமிழ் அமைப்புகள் ராஜுவ்காந்தி கொலை குற்றவாளிகளுக்காக அவர் தீக்குளித்தார் என்ற தவறாக பிரசாரம் செய்து வருவதாகவும் தினமலர் நாளிதழ் வழக்கம் போல, ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

இது தமிழ் உணர்வாளர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கடந்த 26ந் தேதி கீழ்கதிர்பூரில் மக்கள் மன்றத்தினர் செங்கொடிக்கு நினைவ இல்லம் திறந்தனர். இந்த நிகழ்ச்சியில் வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க டி.வி. செய்தியாளர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்களுடன் "தினமலர்' செய்தியாளர் மணவாளன், 30, என்பவரும் இருந்துள்ளார். ஆனால் அவர் ஒரு பகுதியிலும் டிவி செய்தியாளர்கள் ஒரு பக்கமும் நின்றுள்ளனர். அப்போது, மக்கள் மன்ற நிர்வாகி மகேஷ், என்பவர் அங்கு பத்திரிகையில் பிரசுரிக்க நிகழ்ச்சியின் செய்திகளை கொண்டு வந்து, ஒவ்வொருவரிடமும் எந்த பத்திரிகையில் இருந்து வந்துள்ளீர்கள் என்று கேட்டு கொடுத்துள்ளார். அதேபோல, மணவாளனிடம் வந்து, விசாரித்துள்ளார். அவர் தினமலர் செய்தியாளர் என்று கூறியுள்ளார். அவரிடமும் நோட்டீசு கொடுத்துள்ளார். பின்னர் மன்ற ஆதரவாளர்களிடம் சென்று தினமலர் செய்தியாளர் வந்துள்ளதாக கூறியதாக தெரிகிறது. உடனடியாக, மக்கள் மன்ற அமைப்பைச் சேர்ந்த, 20 பேர் திடீரென மணவாளனை சூழ்ந்து கொண்டு, அடித்து உதைத்துள்ளனர். அவர் கும்பலிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் விரட்டி அடித்துள்ளனர்.

தொலைகாட்சி நிறுவன செய்தியாளர்களும் கேமராக்களுடன் என்னவென்று தெரியாமல் சம்பவத்தை படம் பிடிக்க ஓடிச்சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்த பிறகே தினமலர் செய்தியாளருக்கு அடிஉதை விழுகிறது என்பதை அறிந்துள்ளனர். உடனடியாக விரட்டிய கும்பலிடம் சமாதானம் செய்துள்ளனர். அப்போது தினமலர் செய்தியாளர் மணவாளனை அடிக்க விடாமல் கலைஞர் டிவி செய்தியாளர் ஜாபர் ஓடிச்சென்று தடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்தவர்கள் அவர் கேமராவையும் பறித்து உடைத்து விட்டனர். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் காவல்துறையினர் வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.  ஆனால் தினமலர் நாளிதழ் தன்மீது தவறே இல்லாதது போலவும், இந்த தாக்குதல், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, பழநெடுமாறன் ஆகியோர் முன்னிலையிலேயே நடந்தது என்றும் செய்தி வெளியிட்டது. . கலைஞர் டிவி நிருபர் ஜாபரின் பெயர் வழக்கம்போல, எங்கும் வராமல் பார்த்துக்கொண்டது. இந்த சம்பவம் குறித்து, மணவாளன் மற்றும் ஜபார் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாலுசெட்டிசத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் செங்கொடி பற்றிய தவறான செய்தியை கொடுத்தது காஞ்சிபுரம் பகுதி தினமலர் செய்தியாளர் நாதன் என்றும், அவர் விடுமுறையில் சென்றுள்ளதால் அவருக்கு பதிலாக மணவாளன் என்பவர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, வைகோ முன்னிலையில் அடித்தனர் என்ற செய்திக்கும் ம.தி.மு.க.சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment