ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, அமெரிக்காவிடம் விசா கோரி விண்ணப்பித்துள்ளார். ஏமனில், அதிபர் சலேவுக்கு எதிராக, மக்கள் கடந்த 10 மாதங்களாகப் போராடி வருகின்றனர். வளைகுடா நாடுகள் கூட்டுறவு கவுன்சில் ஒப்பந்தப்படி, அடுத்தாண்டில் அதிபர் தேர்தல் நடக்கும். இதுவரையில் அதிபர் செய்த குற்றங்களுக்கு அவர் மீது வழக்குகள் போடப்பட மாட்டாது.
ஆனால், அதிபர் தனது ஆட்சியில் ஆயிரக்கணக்கானோரை ராணுவம் மூலம் கொன்று குவித்ததற்கு தண்டனை பெற வேண்டும் என, மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாட்டில் அமைதி நிலவவும், மருத்துவ சிகிச்சை பெறவும் அமெரிக்கா செல்ல சலே முடிவெடுத்தார். இதற்காக, அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், அதற்கு அமெரிக்கா அனுமதியளித்ததாகவும் செய்திகள் வெளியாயின.
ஆனால், நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில், சலேவுக்கு அனுமதியளிப்பது குறித்து இன்னும் ஆலோசித்து வருவதாகவும், அவர் விசாவுக்காக விண்ணப்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று ஏமனில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், மருத்துவ சிகிச்சைக்காக விசா கோரி சலே விண்ணப்பித்துள்ளார். இத்தகவலை, ஏமன் ஆளும் கட்சி மூத்த பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், அவரது விண்ணப்பம் மீதான பரிசீலனை தொடர்வதாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் நேற்று, மீண்டும் உறுதிப்படுத்தினார்.
thanks to yarlmuslim
0 comments:
Post a Comment