Tuesday, December 20, 2011

இஸ்லாமிய வாதிகளின் போராட்டங்களும், தந்திரோபாயங்களும்



றவூப் ஸெய்ன் 


அறபு-முஸ்லிம் நாடுகளில் கடந்த பல தசாப்தங்களாகப் போராடி வரும் இஸ்லாமியவாதிகள் பற்றிய மங்கலான அல்லது தவறான அபிப்பிராயங்களே சமூகத்தில் நிலவுகின்றன. எத்தகைய சக்திளோடு அவர்கள் போராடி வருகின்றனர் என்ற உண்மையும் பலரால் புரிந்துகொள்ளப்படவில்லை.

முற்றிலும் சாத்வீக வழியில் நூறு வீதம் ஜனநாயக முறையில் இஸ்லாமிய சமூக மாற்றம் ஒன்றுக்காக உழைப்பவர்களையே இஸ்லாமியவாதிகள் என்கிறோம். பெரும்பாலும் இவர்கள் இஸ்லாமிய இயக்கத்தினூடாக செயற்படுகின்றனர். இஸ்லாமிய நாகரிகத்தை மீளவும் கட்டியெழுப்புதல், அதை ஒரு வாழ்க்கைத் திட்டமாக நடை முறைப்படுத்தல், நவீனகால அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு இஸ்லாத்தை ஒரு தீர்வுத்திட்டமாக முன்வைத்தல் என்பவையே இத்தகைய இஸ்லாமிய வாதிகளின் இலக்குகள். 

இஸ்லாம் என்பது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம். அதற்கென்று தனித்துவமான பொருளாதார, இஸ்லாமிய சமூக ஒழுங்குகள் உள்ளன. இவ்வாறான, சமூகம், பொருளாதார, அறிவுத்துறை, ஆன்மீக மாற்றங்கள் மூலமே சாத்தியம் என இவர்கள் நம்புகின்றனர். இதற்கான முதல் வழிமுறை, இஸ்லாத்தை ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டமாக மக்களிடம் கொண்டு செல்வதே. ஜனநாயக பூர்வமான பிரச்சார முறைகளை இதற்கென கையாள வேண்டும். 

அதிகாரமில்லாத சூழலில் இஸ்லாம் சமூக வாழ்க்கைத் திட்டமாக முடியாது. அவ்வகையில் மக்களின் சிந்தனையிலும் அறிவிலும் ஆன் மீகத்திலும் மாற்றங்களை உருவாக்கி, அரசியல் ரீதியான செயற்பாடுகளிலும் இறங்குவதனூடாக இஸ்லாத்தை முழு வடிவில் அமுல்படுத்த வேண்டும் என்பதே இவர்களின் ஒரே எதிர்பார்ப்பு. 

உலகில் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்பட்டுவரும் இஹ்வானுல் முஸ்லிமூன் எனும் பாரிய இஸ்லாமிய இயக்கம் இந்தப் பின்னணியிலேயேதான் அரசியலையும் அரசியல் அதிகாரத்தையும் நோக்குகின்றது. இவர்களின் தஃவா வெறுமனே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையோ நாடு பிடிப்பதையோ நோக்காகக் கொண்டதல்ல. அவர்களின் கடந்த எட்டு தசாப்தகால கடின உழைப்பின் மூலம் அறபு முஸ்லிம் நாடுகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 

இன்று அறபு நாடுகளின் மக்கள் புரட்சியை அடுத்து நடைபெற்ற தேர்தல்களில் மிகவும் நிதானமாகவும் நுணுக்கமாகவும் களமிறங்கி வெற்றிவாகை சூடி வருகின்றனர். இந்த அதிகாரத்தினூடே தத்தமது நாடுகளில் இஸ்லாமிய சமூக மாற்றம் ஒன்றை அவர்கள் கனவு காண்கின்றனர். 

"நாம் அவர்களுக்கு இப்பூமியில் அதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள்; ஸகாத்தையும் வழங்குவார்கள்" எனும் குர்ஆனிய வசனம் ஓர் இஸ்லாமிய அரசின் முதற் கடமை ஆன்மீக வாழ்வை கட்டியெழுப்புவதும் மக்களின் அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதுமே என்கின்றது. இதுதான் இஹ்வான்களின் அரசியல் பணியாகும். 

இஸ்லாத்திற்கே உரிய அரசியல் சிந்தனையில் மிகத் தெளிந்த நிலைப்பாட்டுடன், நடைமுறையில் அதை செயற்படுத்துவதற்கான நுணுக்கத்தையும் இவர்கள் கொண்டுள்ளனர். மேற்கத்தேய சக்திகள், சியோனிஸ்டுகள் மற்றும் அறபு நாடுகளிலுள்ள மதச்சார்பற்ற சக்திகள் இவர்களது பரம எதிரிகளாக உள்ளனர். காரணம் அவர்கள் இஸ்லாத்திற்குப் புறம்பான கொள்கை கொண்டவர்கள். 

இஸ்லாமியவாதிகள் அதிகாரத்திற்கு வருவதை இந்த சக்திகள் விரும்பவில்லை என்பது மட்டு மன்றி, அதற்கான வாய்ப்பைத் தடுப்பதிலும் மும்முரமாக இருந்து வருகின்றனர். 

இனம், மொழி, நாடு, குலம், கோத்திரம் ஆகிய எல்லாத் தடைகளையும் தாண்டி, உலக மக்களை ஓரணியில் திரட்டும் ஆற்றல் இஸ்லாம் எனும் கருத்தியலுக்கு மாத்திரமே உண்டு. ஆகவே, அக்கருத்தியலில் எல்லோரையும் ஒன்றிணைக்கும் சக்தியை (இஸ்லாமிய வாதிகளை) மேற்கு எப்போதும் எதிரியாகவே நடத்தி வந்துள்ளது. 

இஸ்லாமியவாதிகளின் இந்த அணிதிரட்டல் மிகுந்த அரசியல், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது. உலக எண்ணெய்யில் 70 வீதத்தையும் பல்வேறுபட்ட பொருளாதார வளங்களையும் 150 கோடி மக்களையும் அது உள்ளடக்கியிருக்கின்றது. எனவே, ஜனநாயக ரீதியில் கூட இஸ்லாமிய சக்திகள் அதிகாரத்திற்கு வருவது தாம் எதிர் கொள்ளும் பெரும் சவால் என மேற்கு கருதுகின்றது. இந்தக் கருதுகோளின் பின்னணியே இஸ்லாமியவாதிகள் பயங்கரவாதிகளாக பூதாகரப்படுத்தப்படுவதற்கான காரணமாகும். 

எந்த ஜனநாயகம் உலகெங்கும் ஆளவேண்டும் என மேற்கு கூறுகின்றதோ அதே ஜனநாயக வழிமுறையினூடாக இஸ்லாமியவாதிகள் அதிகாரத்திற்கு வருவதை மேற்கு தடுத்தே வந்திருக்கின்றது. சுதந்திரத்திற்குப் பிந்திய இஸ்லாமிய உலகின் வரலாறு இந்த உண்மையை பலமுறை நிரூபித்திருக் கின்றது. இதற்கு தெளிவான இரு உதாரணங்களை இங்கு தருகிறோம். 

1924 இல் உஸ்மானிய கிலாபத் இரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 80 ஆண்டுகால இடைவெளியில் துருக்கியில் நடைபெற்ற இராணுவ சதிப் புரட்சி முதல் உதாரணமாகும். 1960, 1971, 1980 ஆகிய காலப் பகுதிகளில் இஸ்லாமிய கருத்துக்கு ஆதரவானவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது அந்நாட்டின் மதச்சார்பற்ற இராணுவத்தைப் பயன்படுத்திய மேற்கு நாடுகள் சதிப் புரட்சிகளை மேற்கொண்டு ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்தன. 

அத்னான் மன்தரீஸின் அரசுக்கு எதிராக நடந்த இராணுவ சதிப்புரட்சி இதற்கு இன்னும் தெளிவான உதாரணமாகும். 1997இல் அர்பகானின் ஆட்சிக்கு எதிராக திரைமறைவில் மேற்கொள்ளப்பட்ட புரட்சி மற்றொரு உதாணம். 2009 இல் அர்தூகானின் அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிடப்பட்ட புரட்சி முளையில் கிள்ளியெறியப் பட்டது. 

1990 இல் அல்ஜீரியாவில் நடந்த உள்நாட்டுத் தேர்தலில் இஸ்லாமிய மீட்பு முன்னணி 55 வீத ஆசனங்களைக் கைப்பற்றியது. 1991 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுத் தேர்தல் இஸ்லாமிய மீட்பு முன்னணியின் மக்கள் ஆதரவைக் கருத்திற்கொண்டு பிற்போடப்பட்டது. அதன் தலைவர் அப்பாஸ் மதனி, அலி பல்ஹாஜ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

அவ்வாண்டின் இறுதியில் நடந்த பொதுத் தேர்தலில் அக்கட்சி 188 ஆசனங்களைப் பெற்றது. இரண்டாவது சுற்றிலும் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசாங்கம் கலகத்தில் ஈடுபட்டு, வன்முறைகளைக் கட்டவிழ்த்தது. அங்கு நடைபெற்ற அத்தனை ஜனநாயக விரோத கொடூரங்களுக்கும் பின்னால் வொஷிங்டன் இருந்தது. 

இந்த கசப்பான அனுபவங்களிலிருந்துதான் இஸ்லாமியவாதிகள் அரசியல் தந்திரோபாயங்களைக் கையாளத் தொடங்கினர். முதற் தடவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற AKP பற்றி ஏற்கனவே மேலைய ஊடகங்களில் உருவாக்கப்பட்டிருந்த விம்பங்கள் மிகவும் கீழ்த்தரமாக உருத்திரிக்கப்பட்டவை. பயங்கரவாத முலாம் பூசப்பட்டவை. இஸ்லாமிய மதப்பயங்கரவாதத்தின் பிரதிநிதியே அர்தூகான் என்று அவை கூறி வந்தன. இந்நிலை நீடித்தால் அர்தூகானின் ஆட்சிக்கும் முடிவு வந்திருக்கும். 

எனவேதான், "எங்களுக்குப் பின்னால் எந்த இஸ்லாமிய நிகழ்ச்சி நிரலும் இல்லை. நாம் மதச்சார்பற்ற ஜனநாயகவாதிகள்" என்ற கோஷத்தோடு அர்தூகான் அரசாங்கத்தை அமைத்தார். இது தொடக்கத்தில் இஸ்லாமிய உலகெங்கும் பெரும் விமர்சனத்தைக் கிளப்பியது. 

துருக்கியின் இஸ்லாத்திற்கெதிரான அரசியலமைப்பை அர்தூகான் படிப்படியாக மாற்றியமைத்த விதமும், இராணுவத்தின் அதிகாரங்களை குறைத்துக் கொண்ட முறையும் தந்திரோபாயமிக்கவை. பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறியுள்ள துருக்கி, இன்று இஸ்லாமியக் காற்றை மெல்ல மெல்ல சுவாசிக்கத் தொடங்கியுள்ளது. அர்தூகான் கையாண்டது தந்திரோபாயங்களே என்பதை இஸ்லாமிய உலகு இன்று ஏற்றுக் கொண்டுள்ளது. 

இன்றைய இஸ்லாமிய அரசியல் போராட்டம் மூலோபாயங்களிலும் தந்திரோபாயங்களிலும் கவனம் குவிப்பது தவிர்க்கவியலாதது. எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவி, தண்ணீருக்குள்ளால் நெருப்பைக் கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. ஜனநாயகப் பாரம்பரியங்களினூடே அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் அதன் மூலம் இஸ்லாத்தை படிப்படியாக அமுல்படுத்துவதுமே யதார்த்தமான வழிமுறை. 

தூனிஸிய நஹ்ழா கட்சியின் தலைவர் ஷெய்க் கன்னூஷி AFP க்கு வழங்கிய பேட்டியொன்றில், "நாம் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கவில்லை" என்று தெரிவித்தமை ஒரு தந்திரோபாயமே. இஸ்லாத்தின் எதிரிகளோடு, இஸ்லாமிய ஆட்சியை கருவறுக்கக் காத்திருக்கும் வைரிகளோடு இந்த அணுகுமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். மாறாக, எடுத்த எடுப்பிலேயே நாம் இஸ்லாமிய கிலாபத்தைக் கொண்டு வருவோம் என்று கோஷமெழுப்பும்போது மேலைய சக்திகள் விழிப்படைந்து விடும். இஸ்லாமியவாதிகளின் அதிகாரத்தைத் தட்டிப் பறிப்பதற்கு முயலும். 

எனவே, காய்களைக் கவனமாக நகர்த்த வேண்டும் என்பதில் இஸ்லாமியவாதிகள் மிகுந்த தெளிவுடன்தான் இருக்கின்றனர். அதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. எகிப்திலும் இஹ்வான்கள் இந்த வகையான அணுகுமுறையையே கையாள்கின்றனர். 

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் உங்கள் நாட்டில் மது அருந்துவதை அங்கீகரிப்பீர்களா என இஹ்வான்களின் அரசியல் ஆலோசகரான கலாநிதி கமால் ஹல்பாவியிடம் BBC செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, "வெளிநாட்டவர்கள் மது அருந்துவதற்கு நாம் முழு அங்கீகாரம் வழங்குவோம். ஆனால், முஸ்லிம்கள் மது அருந்துவதை இஸ்லாம் தடைசெய்துள்ளது" என நுணுக்கமாகப் பதிலளித்தார். 

ஜனநாயக அரசாங்கத்தின் நெகிழ்வுத் தன்மை, மனித உரிமைகள், பெண்ணுரிமை, கருத்துச் சுதந்திரம், அரசியல் பன்மைத்துவம் ஆகிய எல்லாவற்றையும் மதிக்கின்ற அரசாங்கமாகவே இஸ்லாமிய அரசாங்கம் இருக்கும். ஆனால் அங்கு இவை அனைத்தும் இஸ்லாமிய ஷரீஆவின் வரையறைக்குள் இருக்கும் என்பதே இஸ்லாமிய வாதிகளின் நிலைப்பாடு. 

யுத்தம் தந்திரோபாயம் நிறைந்தது எனக் கூறிய நபிகளாரின் வார்த்தைகளையே இன்றைய இஸ்லாமியவாதிகள் அறபுலகில் பின்பற்றுகின்றனர். பத்திரிகைச் செய்தியை வாசித்து விட்டு இஸ்லாமிய உலகம் குறித்து கட்டுரை எழுதுகின்றவர்களை நான் எச்சரிக்கின்றேன். குறைந்தபட்சம் கடந்த 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றையேனும் மேலோட்டமாக படிக்கின்றவர்களால் மட்டும்தான் இஸ்லாமியவாதிகளைச் சரியாக மதிப்பிடலாம். 

ஏனெனில், மேலைய ஊடக ஜாம்பவான்களிடம் சந்தாவுக்குச் செய்திகளை வாங்கும் சராசரி ஊடகங்களின் செய்திகளுக்குள் சிறைப்பட்டு இஸ்லாமிய உலகைப் மதிப்பிட முயல்வது சரியான பார்வைகளை ஒருபோதும் தராது.
THANKS TO YARLMUSLIM

0 comments:

Post a Comment