Friday, December 30, 2011

சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கடத்தவிருந்த ரூ.1000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.


இந்தியாவில் இருந்து, மலேசியா உள்ளிட்ட, தெற்காசிய நாடுகளுக்கு போதை மருந்து கடத்தும் கும்பல் சிக்கியது. முதற்கட்ட விசாரணையில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையில், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 5,100 கிலோ போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை மையமாக வைத்து போதை மருந்து கடத்தும் கும்பல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் மருத்துவத்திற்கு பயன்படும் எபிடிரின், கேடமைன் உள்ளிட்ட மருந்துகள், உலகின் பல்வேறு நாடுகளில் போதைப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், இவற்றை கடத்துவதில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டுகளில், சென்னை வழியாக கடத்தப்பட இருந்த ஏராளமான போதை மருந்துகள் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை மருந்து கடத்தலின் பின்னணி குறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருந்து பல தகவல்கள் தெரிய வந்துள்ளன.

ரகசிய தகவல்: சென்னை மற்றும் ஐதராபாத்தில் உள்ள சிலர், தெற்காசிய நாடுகளுக்கு எபிடிரின் எனப்படும் போதை மருந்தை கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கூடுதல் தலைமை கமிஷனர் ராஜன் உத்தரவை அடுத்து, சென்னை மற்றும் ஐதராபாத்தில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.

கடத்தல்காரர்கள் சிக்கினர்: கடந்த 26ம் தேதி நள்ளிரவு, அதிகாரிகள் கொண்ட குழு, ஐதராபாத்தில் உள்ள, ஜிடிமெட்லா என்ற இடத்தில் இயங்கி வரும், எபிடிரின் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை கண்காணித்தது. அப்போது, அங்கு நின்றிருந்த ஒரு காரில், சந்தேகப்படும்படியாக இருவர் அமர்ந்திருந்தனர். ஐதராபாத்தைச் சேர்ந்த துர்காராவ், 51; ராம்பாபு, 51, என்ற அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, எபிடிரின் மருந்தை கடத்துவதை ஒப்புக் கொண்டனர். மேலும், சென்னையில் இருந்து வரும் இருவரிடம் மலேசியாவிற்கு கொண்டு செல்வதற்காக போதை மருந்தை வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்கள் பயன்படுத்திய காரில் இருந்து, 100 கிலோ எபிடிரின் போதை மருந்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை பார்ட்டிகளும் சிக்கினர்: ஐதராபாத்தைச் சேர்ந்த இருவர் கொடுத்த தகவலின் படி, சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு விமானம் மூலம் வந்த, ராயபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம், 42; நாகூர்கனி, 40, ஆகிய இருவரையும் விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, ஐதராபாத்தில் இயங்கி வந்த எபிடிரின் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

கணக்கில் முறைகேடு: இந்த சோதனையின் போது, தொழிற்சாலை நிர்வாகம் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த 5,000 கிலோ, எபிடிரின் மருந்து கைப்பற்றப்பட்டது. இது சம்பந்தமாக தயாரித்தல் மற்றும் இருப்பு வைத்தல் என்பதற்கான எந்த ஆவணங்களும் பராமரிக்கப்படவில்லை. மேலும், தயாரிக்கப்பட்ட, 400 கிலோ, எபிடிரின் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்த புள்ளி விவரங்களும் இல்லை. இதையடுத்து, 5,000 கிலோ எபிடிரின் மருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட் மருந்தின் மொத்த உள்ளூர் மதிப்பு, 40 கோடி ரூபாய்; சர்வதேச சந்தை மதிப்பு, 1,000 கோடி ரூபாய்.

போதை மருந்து கடத்தல் கும்பல் சிக்கியது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு கூடுதல் தலைமை கமிஷனர் ராஜன் கூறியதாவது: முதற்கட்ட விசாரணையில் நான்கு பேர் சிக்கியுள்ளனர்; தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நாடு தழுவிய அளவில் இந்த கும்பலுக்கு நெட் ஒர்க் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். மிக விரைவில் கடத்தல் கும்பல் முழுவதும் சுற்றி வளைக்கப்படும்.இவ்வாறு ராஜன் கூறினார்.

as
நன்றி thedipaar .com 

0 comments:

Post a Comment