Friday, December 30, 2011

எண்ணெய்க் கப்பல்களை ஈரான் மறித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அமெரிக்கா எச்சரிக்கை


ஹோர்முஸ் நீரிணையை மூடப் போவதாக ஈரான் அறிவித்துள்ளதை அமெரிக்கா கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, இதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை மேலும் விதித்தால் வளைகுடா நாடுகளை இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிடுவோம் என ஈரான் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இது குறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் செய்தியாளர்களிடம் கூறியது:

உலகின் கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதம் இந்தப் பிராந்தியம் வழியாக எண்ணெய்க் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. வளைகுடா நாடுகளை இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையானது பஹ்ரைன், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் போக்குவரத்தை இந்திய பெருங்கடலுடன் இணைக்கிறது. இந்தப் பகுதி வழியாக செல்லும் கப்பல்களை மறிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டால் அதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று லிட்டில் குறிப்பிட்டார்.

முன்னதாக ஈரான் துணை அதிபர் முகமது ரெஸô ராஹ்மி பேசுகையில் ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு சொட்டு எண்ணெய் கூட பிற நாடுகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் லிட்டில் இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை மூடுவது என்பது ஒரு கோப்பை தண்ணீரைக் குடிப்பதை விட எளிதான செயல் என்று ஈரான் கடற்படை தளபதி அட்மிரல் ஹபிபுல்லா சயாரி குறிப்பிட்டிருப்பதும் அமெரிக்காவை மேலும் எரிச்சலூட்டியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக போக்குவரத்தை அனுமதிப்பது இப்பிராந்தியத்துக்கு மட்டுமல்ல பிற நாடுகள் வளம்பெறவும் மிகவும் அவசியமாகும். சர்வதேச கடல் பிராந்தியத்தில் போக்குவரத்துக்கு எவரேனும் இடையூறு செய்வார்களேயானால் அதை ஒருபோதும் தாங்கிக் கொள்ள முடியாது என்று பஹ்ரைன் கடற்படை பெண் கமாண்டர் அமி டெரிக் ஃபிராஸ்ட் தெரிவித்தார்.

பஹ்ரைனில் நிலை நிறுத்தப்பட்டுள்ள தங்களது போர்க்கப்பல் இப்பிராந்தியத்தில் சரளமான வர்த்தக போக்குவரத்தைக் கண்காணித்து வருவதோடு அதை சீர்குலைக்க முயல்வோரைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றார் ஃபிராஸ்ட்.

as
thanks to thedipaar.com

0 comments:

Post a Comment