Friday, December 30, 2011

இரண்டாம் உலகப்போர் - ஹிரோஷிமா



THE AFTER PICTURES ARE VISUALLY
EXTRAORDINARY HIROSHIMA 64 YRS LATER...
Hiroshima, Nagasaki 1945 
இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப்போர் 2 (World War II, அல்லது Second World War) என அறியப்படுகிறது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காணப்பட்ட இரண்டு வெவ்வேறுபட்ட அரசியல்,போரியல்முரண்பாடுகளின் சேர்கைக் காரணமாக உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்ற பெரும் போரைக் குறிக்கும். முதல் முரண்பாடானது 1937 ஆம் ஆண்டு ஆசியாவில் இரண்டாம் சீன யப்பானிய போராகவும் மற்றையது ஐரோப்பாவில் செருமனியின் போலந்து மீதான ஆக்கிரமிப்புப் போராகவும் தொடங்கியது. உலகலாவிய அளவில் நடைபெற்ற இந்தப்போரின் போது பெரும்பான்மையான உலக நாடுகள் நேச, அச்சு நாடுகள் என இரண்டாக பிளவுபட்டுப் போரிட்டன. மனித வரலாற்றில் மிகவும் அழிவுமிக்க சம்பவமான இப்போரின் போது 70 மில்லியன் பேர் வரை கொல்லப்பட்டனர்
இப்போரில் தான் முதன்முதலாக அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அமெரிக்கா சின்னப் பையன்(little boy), கொழுத்த மனிதன்(fatman)என்று பெயரிடப்பட்ட இரு குண்டுகளை ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய நகரங்கள் மீது வீசியது.
 
அறுபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு, அதாவது 1945ஆம் வருடம் ஆகஸ்ட் 6ந் தேதி காலை 8.15 மணி. அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த பிரிகேடியர் பால் டிப்பெட்ஸ் ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது ஒரு பி-29 விமானத்தில் பறந்துகொண்டிருந்தார். அடுத்த சில நொடிகளில் அந்த விமானத்திலிருந்து 16 கிலோ டன் யுரேனிய அணுகுண்டு வீசப்பட்டது. ஒரு பாராசூட் விரிந்தது. சூரியனைப் போன்ற வெளிச்சம் தோன்றியது. அவ்வளவுதான், ஹிரோஷிமா நகரம், நரகமாகியது. பாராசூட் உருகுவதைப் பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண்களின் கண்கள் உருகின. முகம் வெடித்தது. நகரம் முழுக்கத் தீப்பிடித்து எரிந்தது. வெப்ப நிலை 4,000 டிகிரியைத் தாண்டியது.
இரும்பு உருகி ஓடியது. மனித உடல்கள் ஆவியாகின. உதவிகோரி நீட்டப்பட்ட கைகளிலிருந்த நகங்களும் தோல்களும் உதிர்ந்தன. அணு குண்டு வெடித்த வேகத்தில் நகரம் முழுவதும் இருந்த வீடுகள் நொறுங்கின. உள்ளிருந்தவர்கள் உயிரோடு எரிந்துபோனார்கள். சில நொடிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் மாண்டனர். அடுத்த ஒரு வருடத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,40,000ஆக உயர்ந்தது. இதற்கு மூன்று நாட்கள் கழித்து “ஃபேட் மேன்” என்று பெயர் கொண்ட மற்றொரு அணு குண்டு நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டது. அங்கேயும் இதே பேரழிவு.
அணு குண்டு வீச்சில் தப்பிப் பிழைத்தவர்கள், கதிரியக்கத்தினால் புற்றுநோய் வந்து சாகும்வரை அவதிப்பட்டனர். இந்த பயங்கர அனுபவம் அவர்களது வாழ்வை முழுமையாகப் புரட்டிப் போட்டது. எப்போது நோய் தாக்குமோ, சாவு வருமோ என்ற பயத்திலேயே அவர்கள் வாழ்வைக் கழித்தனர். வாழ்வதைவிட சாவதே மேல் என்ற நிலைதான் அவர்களுக்கு.
இந்த அணுகுண்டு வீச்சு, தொழில்நுட்ப, ராணுவ சாதனையாக சுட்டிக்காட்டப்பட்டது. “வரலாற்றின் மிக மகத்தான தருணம்” என்று இதைக் அழைத்துக் கொண்டார்கள். ஒரு நியாயமான யுத்தத்தில் இந்த அணுகுண்டு வீச்சு அவசியம்; தவிர இதனால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்பதுதான் அமெரிக்க அரசின் அதிகாரபூர்வமான நிலைப்பாடாக இருந்தது. ஆனால், பிற்காலத்தில் வரலாற்று ஆவணங்களை ஆராயும்போது, ஜப்பானியர்கள் முன்பே சரணடையத் தயாராக இருந்தனர் என்பதும் இந்தக் குண்டுவீச்சு தேவையில்லாத ஒன்று என்பதும் தெரியவந்தது. 1963ல் நியூஸ்வீக் இதழுக்குக் கொடுத்த ஒரு பேட்டியில் அமெரிக்க அதிபர் ட்விட் ஐஸநோவர் இதைக் குறிப்பிட்டார்.
இந்தக் குண்டுவீச்சுக்குப் பிறகு, பல அமெரிக்கர்கள் குற்ற உணர்ச்சியில் மருகினார்கள். மன்ஹாட்டன் புராஜக்டின் சயிண்டிஃபிக் டைரக்டர் ராபர்ட் ஆப்பன்ஹைமர், இந்தக் குண்டு “தோற்கடிக்கப்பட்ட எதிரியின் மீது” வீசப்பட்டதாக 1945ல் குறிப்பிட்டார்.
இந்தக் குண்டுவீச்சினால் ஹிரோஷிமா, நாகசாகியில் நிகழ்ந்த பயங்கரமானது, உலகில் அரசியல், ராணுவ அதிகார அடுக்குகளின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு எந்தப் பாடத்தையும் தந்ததாகத் தெரியவில்லை. இந்த அணுகுண்டு வீச்சினால்தான் அடுத்த 40 ஆண்டுகளை உலகம் கெடுபிடிப் போரில் கழித்தது. நாடுகளை ஆயுதப் போட்டியில் தள்ளியது. ஒருகட்டத்தில் உலகில் இருந்த அணு குண்டுகளின் எண்ணிக்கை 70,000ஐ எட்டியது. இதை வைத்து லட்சக்கணக்கான ஹிரோஷிமாக்களை அழிக்கலாம். ஏன், நம் பூமி அளவிலான 50 கிரகங்களை அழிக்கலாம்.
உலகிலிருக்கும் அணுகுண்டுகளை அழிக்க,அவை பரவுவதைத் நிறுத்த, அவை பயன்படுத்தப்படாமல் தடுக்க,அவற்றை அழிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும்,முன்னேற்றம் ஏதும் இல்லை. இப்போது உலகில் 20,000அணுகுண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இவற்றில் 10,000 குண்டுகள் தகுந்த இடங்களில் ஆயத்தமாக நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குண்டுகள் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் இருக்கின்றன.
நல்லவேளையாக, கடந்த 64 ஆண்டுகளில் மீண்டும் அணுகுண்டு பயன்படுத்தப்படவில்லை. ஆனால், அப்படி ஒரு அழிவை நெருங்கிய தருணங்கள் பல உண்டு. 1962 க்யூபா ஏவுகணை பிரச்னையின்போது அமெரிக்கா அணுகுண்டைக் கையில் எடுத்தது. 1983ல் ரஷ்யாவில் இருந்த எச்சரிக்கை அமைப்பில் ஏற்பட்ட தவறால் அமெரிக்காவின் ஐந்து ஏவுகணைகள் ரஷ்யாவை நோக்கி வருவதாக தகவல் கிடைத்தபோது, ரஷ்யா அணுகுண்டுகளைத் தயார் செய்தது. 1995ல் நார்வேயிலிருந்து ஒரு ராக்கெட் ஏவப்பட்டபோது, அதை அணுஆயுதத் தாக்குதலாக நினைத்தது ரஷ்யா. 2007 ஆகஸ்ட் 29-30ந் தேதி அணுகுண்டு பொருத்தப்பட்ட ஆறு ஏவுகணைகள் ஏற்றப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானம் ஏங்கோ சென்றுவிட்டது. அந்த விமானம் எங்கே சென்றது என 36 மணி நேரம் வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இப்படி மனிதத் தவறுகளினால் ஏற்படும் அபாயங்கள் போக, வேறு சில பயங்கரங்களும் இருக்கின்றன. உலகெங்கும் இருக்கும் பயங்கரவாதிகள் அணுகுண்டுக்கான மூலப் பொருள்களையும் அதற்கான தொழில்நுட்பத்தையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவை கிடைத்துவிட்டால், அணுகுண்டைச் செய்து அதை நிச்சயம் பயன்படுத்துவார்கள். எதிரி நாடு தம்மீது அணுகுண்டைப் பயன்படுத்தாமல் இருக்க அணுகுண்டு வைத்திருப்பதாகப் பல நாடுகள் சொல்கின்றன. பயங்கரவாதிகளிடம் இந்த வாதம் எல்லாம் செல்லாது. தவிர, இணையத் தொழில்நுட்பம் வளர்ந்துவருவதால், ஒரு நாட்டின் அணு ஆயுத கட்டுப்பாட்டை பயங்கரவாதிகள் எளிதில் கைப்பற்றும் வாய்ப்பு இருக்கவும் செய்கிறது.
சுமார் 40 நாடுகளிடம் அணு ஆயுதப் பொருள்கள் இருக்கின்றன. அவை எல்லாமே பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்ல முடியாது. இணையத்தில் தகவல்கள் கொட்டிக்கிடக்கும் இந்த யுகத்தில், இந்தப் பொருள்களை வைத்து அணு ஆயுதம் செய்யும் தகவல்களை பயங்கரவாதிகள் எளிதாகப் பெற்றுவிட முடியும். தற்போது இருக்கும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் போதுமானதாக இல்லை. இதனால் வரும் ஆண்டுகளில் அணு ஆயுதத்தை வைத்திருக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். 15-20 நாடுகள் அணு ஆயுத நாடுகளாகிவிட்டால், உலகம் உண்மையிலேயே மிக அபாயகரமான இடமாகிவிடும். அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தேசங்கள் அணு குண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருள்களையும் அதற்கான தொழில்நுட்பத்தையும் விரைவிலேயே பெற்றுவிடும் என்பது மற்றொரு அபாயம்.
ஒவ்வொரு நாடும் அணுகுண்டை வைத்திருப்பதற்கு பெருந்தொகையைச் செலவிடுகிறது. 2008ல் அமெரிக்கா மட்டும் கிட்டத்தட்ட 52.4 பில்லியன் டாலர்களை அணு ஆயுதங்களுக்கும் அது தொடர்பான திட்டங்களுக்கும் செலவிட்டது. தனது அணு ஆயுதத் திட்டத்தை மேம்படுத்தவும் அவற்றை வைத்திருக்கவும் சுமார் 29 பில்லியன் டாலர்களை வருடந்தோறும் செலவிடுகிறது அமெரிக்கா. இந்தத் தொகை இந்தியாவின் பட்ஜெட்டைவிட அதிகம். உலகம் முழுவதும் அணு ஆயுதங்களை மேம்படுத்த ட்ரில்லயன் கணக்கில் செலவிடப்படுகிறது. அணு ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் 110மில்லியன் டாலர்கள் செலவிடப்படுகின்றன.
உலகம் இதே திசையில் தொடர்ந்து செல்லுமானால், தவறின் காரணமாகவோ, வேண்டுமென்றோ அணு குண்டு மீண்டும் பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது. தற்போதே தடுப்பு நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால் 2013ல் ஒரு அணு ஆயுத யுத்தமோ, உயிரி ஆயுதத் தாக்குதலோ நடத்தப்படலாம் என அமெரிக்கக் குழு ஒன்று எச்சரித்திருக்கிறது.
அணு ஆயுதங்களற்ற உலகை உருவாக்குவதற்கான வழிமுறைகள் முன்பே கூறப்பட்டிருக்கின்றன. ஆனால், அதற்கென காலக்கெடு ஏதும் இல்லாததுதான் கவலையளிக்கிறது. அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் எல்லாம் அவற்றை அழிப்பதும், தம் பாதுகாப்புத் திட்டத்தில் அணு ஆயுதத்தைச் சேர்ப்பதில்லை என்று உறுதியளிப்பதும்தான் முதல் படி. அடுத்தகட்டமாக, அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் எல்லாம், அணு ஆயுதத்தை தாம் முதலில் பயன்படுத்துவதில்லை என்றும் அணு ஆயுதம் இல்லாத நாடுகளின் மீது பயன்படுத்துவதில்லை என்றும் உறுதியளிக்க வேண்டும்.
 
சுதந்திரம் அடைந்ததிலிருந்தே இந்தியா உலகம் முழுவதும் எந்தப் பாகுபாடும் இன்றி, அணு ஆயுதங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அணு ஆயுதங்களை ஒழிப்பது பற்றிய ஐநாவின் சிறப்புக் கூட்டத்தில் இந்தியா இதற்குப் பல திட்டங்களை முன்வைத்தது. உலகில் இருக்கும் அத்தனை பேரழிவு ஆயுதங்களையும் அழித்துவிட வேண்டும் என்றது இந்தியா. 2010ல் அணு ஆயுத பரவல் தடை மறு ஆய்வு மாநாடு நடக்கவிருக்கிறது. அணு ஆயுதங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டே இருப்பதைச் செயலில் காட்ட இந்த மாநாடு ஒரு வாய்ப்பு.
ஹிரோஷிமா தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்த ஒரு முதியவர் “இந்த அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான இருக்கிறது. இந்த ஆயுதங்களை முற்றிலும் அழித்துவிடுவதுதான் அந்த வழி. ஒன்று அணு ஆயுதங்களை அழித்துவிட வேண்டும் அல்லது மனிதர்கள் தாம் உருவாக்கிய ஆயுதங்களாலேயே அழிந்து போக வேண்டும்” என்று குறிப்பிடுகிறார். வல்லரசுகளின் காதில் விழுகிறதா?
 
We all know that Hiroshima and Nagasaki
were destroyed in August 1945 after explosion
of atomic bombs.
However we know little about the progress
made by the people of that land during the
past 62 years
THE COLORFUL CITY OF HIROSHIMA NOW
 
 
 
 
 
thanks to 

0 comments:

Post a Comment