சிறுபான்மை சமூகத்தினருக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஒ.பி.சி) இடஒதுக்கீட்டில் 4.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தது. இத்தீர்மானத்திற்கு எதிராக பாரதீய ஜனதா கட்சியும், சங்க்பரிவார அமைப்புகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாதாம் தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டிற்கு எதிராக உள்நாட்டு போருக்கும் பா.ஜ.க தயாராகுமாம்!
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி இம்முறை உ.பி உள்ளிட்ட ஐந்து மாநில சட்ட பேரவை தேர்தல்களில் நோட்டமிட்டு இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், பாராட்டத்தக்கதொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.
மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என பா.ஜ.க தலைவர்கள் தங்களது எதிர்ப்பை நியாயப்படுத்த சுட்டிக் காட்டுகின்றனர். அரசியல் சட்டத்துடனும், சிறுபான்மையின மக்களுடனும் பா.ஜ.கவிற்கும், சங்க்பரிவாரத்திற்கும் அணு அளவேனும் மதிப்பிருந்தால் உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜிதை இடித்து தள்ளியிருப்பார்களா? அரசியல் சட்டத்தையும், நீதிபீடத்தையும் சிறிதளவேனும் மதித்திருந்தால் சிறுபான்மை வகுப்பினரான முஸ்லிம்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இன அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நரேந்திர மோடியை தலையில் தூக்கி வைத்து ஆடியிருப்பார்களா? சுருக்கமாக கூறினால், பாரதீய ஜனதா கட்சி மற்றும் சங்க்பரிவார அமைப்புகளின் எதிர்ப்பின் பின்னணியில் இருப்பது வகுப்புவாதமும், முஸ்லிம்கள் மீதான தீராத பகையுமாகும். இவற்றை விட வேறு எந்த அஜண்டாவும் அவர்களுக்கு இல்லை.
இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கிடைத்தே தீரவேண்டும் என்றால் அவர்கள் இந்துமதத்தின் தாழ்த்தப்பட்ட ஜாதிகளில் அபயம் தேடிக்கொள்ளலாம் என்ற தொகாடியாவின் வகுப்பு வெறியை உமிழும் விஷம் தோய்ந்த வார்த்தைகளில் இருந்து சங்க்பரிவாரத்தின் இடஒதுக்கீட்டின் மீதான வெறுப்பை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
சிறுபான்மையின வகுப்பினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்கள், பார்ஸிகள் ஆகியோரும் அடங்குவர். ஆனாலும், ‘முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு’ என்ற கார்ப்பரேட் ப்ரேக்கிங் நியூஸ்கள் வந்த உடனேயே தளர்ந்துகிடந்த பா.ஜ.க தலைவர்கள் துள்ளி எழுந்து தங்களை அலங்கரித்துக் கொண்டு தொலைக்காட்சியில் வாதம் புரிய கேமராவுக்கு முன்னால் போஸ் கொடுக்க அணிவகுத்தனர். மதசார்பின்மையும், தேசப்பாதுகாப்பும் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தொலைக்காட்சி விவாதங்களில் வெதும்பினர்.
பல தசாப்தங்களாக இந்தியாவில் பாரபட்சம் மற்றும் சமூக சூழல்களின் பலி ஆடுகளான முஸ்லிம்களுக்கு இந்த குறைந்தளவு இட ஒதுக்கீடாவது ஆறுதல் அளிக்கட்டும் என்ற கருத்து எந்த சேனல்களின் விவாதத்திலும் இடம்பெறவில்லை. மாறாக லோக்பால் என்ற ஊழல் எதிர்ப்புக் குழுவில் கூட அச்சமூகத்திற்கு இடம் அளிக்கக்கூடாது என்ற கூக்குரல்தான் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் கேட்டது.
தினமணி என்ற பார்ப்பன நாளேடு பழத்தில் ஊசியை அல்ல விஷ ஊசியை ஏற்றும் கைங்கர்யத்தை தலையங்கம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. மேலோட்டமாக படித்தால் நன்றாகத்தான் இருக்கும் அதன் பின்னணியில் இருக்கும் மேல்ஜாதி திமிரும், காழ்ப்புணர்வும் அதனை சற்று ஆழ்ந்து கவனித்தால் புரியவரும்.
பா.ஜ.கவின் அதே இனவெறியைத்தான் சேனல்களில் நடந்த விவாதங்களிலும் காணமுடிந்தது. ‘அரசியல் சட்ட விரோதம்’ என்ற போர்டை மாட்டி வைத்துவிட்டு ஆக்ரோஷமடைந்தார்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரும் வேளையில் அரசியல் சட்டவிரோதம் என்ற குரல் எழும்பவில்லை. அரசியல் சட்டத்தின் எந்த இடத்திலும் 50 சதவீத இடங்களை மகளிருக்கு ஒதுக்கவேண்டும் என்று கூறவில்லை. ஆனாலும், உள்ளாட்சிகளில் 50 சதவீத இடங்களும் மகளிருக்கு மனதார வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் என்பது கடைசி வார்த்தை அல்ல. நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதை அறியாமல் இந்த மற்போர் நடக்கவில்லை. அரசு தீர்மானம் வந்தால் அதன் தடைகள் ஒவ்வொன்றாக அகலும். முஸ்லிம்கள் அத்தகைய சலுகைகளுக்கு எல்லாம் தகுதியானவர்கள் அல்லர் என்பது தான் உண்மையான பின்னணி.
1956-ஆம் ஆண்டு சீக்கிய மதப் பிரிவினரையும், 1990-ஆம் ஆண்டு புத்த மதத்தை சார்ந்தவர்களையும் எஸ்.சி/எஸ்.டி பட்டியலில் சேர்த்த வேளையில் யாரும் அதனை எதிர்க்கவில்லை. இடஒதுக்கீட்டின் பலனை முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அடங்கிய சிறுபான்மையினர் அனுபவித்து விடக்கூடாது என்ற மேல்ஜாதி ஆதிக்க மனப்பாண்மைதான் தேசிய நீரோட்டத்தில் காணப்படுகிறது.
இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு கூட இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கக் கூடாது என மேல்ஜாதி வர்க்கம் பாடுபடுகிறது.
சிறுபான்மை சமூகத்தினருக்கு அவர்களின் தனித்தன்மையை இழக்காத வகையிலான நலத் திட்டங்களுக்கு உறுதியான நடவடிக்கைகள் தேவை என அரசியல் சட்டம் கூறுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக இடஒதுக்கீடும், உறுதியான நடவடிக்கைகளும் தொடர வேண்டியது வரலாற்று ரீதியான ஒரு அத்தியாவசியமும் ஆகும். ஆனால், சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கு பிறகும் மத சிறுபான்மையினரின் நிலை என்ன? கல்வி, அரசு பணி, தனியார் துறை, மீடியா – என அனைத்துத் துறைகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் எவ்வளவு? வருமானம், சுகாதாரம், தொழில் துறை ஆகியவற்றில் நாடு அடைந்த முன்னேற்றத்தில் ஒடுக்கப்பட்ட சமூகம் அடைந்த பலன் என்ன? இக்கேள்விகளுக்கு எல்லாம் எதிர்மறையான பதில்களே கிடைக்கும்!
வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்திய வேளையில் ஊடகங்களும், கார்ப்பரேட்டுகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வீதிகளில் கட்டவிழ்த்துவிட்ட வெறுப்பின் ஆக்ரோஷ பிரகடனத்தை மறக்க இயலாது. இறுதியில் தலித்-பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் அரசியல் உணர்வை அங்கீகரிக்க வேண்டிய சூழலுக்கு தேசிய கட்சிகள் தள்ளப்பட்டன. இடஒதுக்கீட்டின் அளவை அந்தந்த மாநிலங்கள் தீர்மானிக்கலாம் என மண்டல் கமிஷன் சிபாரிசு செய்த போதிலும் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகம் அனைத்து மாநிலங்களிலும் புறக்கணிக்கப்பட்டனர். இந்தியாவில் முஸ்லிம்களை ஒ.பி.சி பிரிவில் உட்படுத்தி இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதற்கு அரசியல் சட்டம் தடையாக இருக்கவில்லை. ஆனால், அதற்கான அரசியல் ரீதியான துணிச்சல் எவருக்கும் இருக்கவில்லை.
தென்னிந்திய மாநிலங்கள்தாம் இதில் முன்மாதிரியாக திகழ்ந்தன. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அமுல்படுத்தின. தமிழகத்தில் 3.5 சதவீதமும், கர்நாடகாவில் 4 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கிய பொழுது அதன் பெயரால் சச்சரவுகள் எழவில்லை. கேரளா மாநிலத்தில் அரசு பணிகளில் 12 சதவீத இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரும் சிறுபான்மை முஸ்லிம்களை ஒ.பி.சியில் உட்படுத்தி இதர மாநிலங்களும் இடஒதுக்கீட்டை அமுல்படுத்தி இருக்கலாம். 19 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் உ.பியில் மண்டல் கமிஷன் பரிந்துரையின் பலன் குறைந்த அளவே முஸ்லிம்களுக்கு கிடைத்தது. 32 ஆண்டுகள் இடதுசாரிகளால் ஆளப்பட்ட மேற்கு வங்காள மாநிலத்தில் முஸ்லிம்களின் சதவீதம் 24 சதவீதம் ஆகும். ஆனால் இடதுசாரிகள் ஆட்சியிலிருந்து விலகுவதற்கு சற்று முன்புதான் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதாக அறிவித்தனர்.
வட இந்தியாவில் தலித், பிற்படுத்தப்பட்ட அரசியல் வலுப்பெற்ற போதிலும் முஸ்லிம்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருந்தனர். தற்பொழுது அடித்தளத்திலிருந்து சில அசைவுகள் முஸ்லிம் சமூகத்திடம் தென்படுகிறது. மே.வங்கத்தில் இதுவரை இடதுசாரிகளுக்கு அளித்து வந்த ஆதரவை முஸ்லிம்கள் மமதாவிற்கு அளித்தனர். அஸ்ஸாமில் முஸ்லிம்கள் காங்கிரஸிற்கு வாக்களிக்காமல் மவ்லானா அஜ்மலின் கட்சிக்கு வாக்களித்து எதிர்கட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளனர். தொப்பி அணிந்தும், அஜ்மீர் தர்காவிற்கு நன்கொடை அளித்தும் முஸ்லிம்களை நம்மோடு நிறுத்தலாம் என கருதிய லாலுவின் திட்டமும் பீகாரில் செல்லுபடியாகவில்லை. உ.பியில் மாயாவதியும், முலாயமும் முஸ்லிம்களின் அசைவுகளை அடையாளம் காண்கின்றனர்.
கல்வி, வேலைவாய்ப்பு என கண்ணியமான வாழ்க்கையை தேடிய முஸ்லிம்கள் துவக்கியுள்ள போராட்டத்தின் ஒரு பகுதிதான் இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கை.
பிரிவினைக்கு பிறகும் இந்தியாவில் வாழ தீர்மானித்த ஒரு சமூகத்திற்கு இந்தியாவை ஆண்ட ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் இழைத்த அநீதியின் சுட்டெரிக்கும் உண்மைகளைத்தான் சச்சாரும், ரங்கநாத் மிஸ்ராவும் தங்களது ஆய்வில் வெளிக்கொணர்ந்தனர். தலித்துகளை விட மோசமான நிலையில் முஸ்லிம்கள் வாழ்வதாக சச்சார் கூறுகிறார். முஸ்லிம் சமுதாயம் தங்களது நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதிச்செய்ய 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் பரிந்துரைச் செய்தது. கிராமங்களில் வாழும் முஸ்லிம்களின் 41.6 சதவீதம் பேருக்கு மாத வருமானம் 825/ ரூபாய் மட்டுமே என்ற உண்மையை ஆக்ஷன் எய்டும், இந்தியன் சோஷியல் இன்ஸ்ட்யூட்டும் நடத்திய புதிய ஆய்வு அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையில், அப்துல் கலாம் இந்தியாவின் குடியரசு தலைவரானதும், ஹமீத் அன்ஸாரி துணை குடியரசு தலைவராக தொடர்வதும், குரைஷி தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டதும், ஷாருக்கான், சல்மான் கான் போன்ற கான் வகையறாக்கள் பாலிவுட்டில் பிரபலமானதையும் சுட்டிக்காட்டி ஒரு மேதாவித்தனமான கேள்வியை எழுப்புகிறார்கள் – இவர்கள் எல்லாம் உயர் பதவிகளை எட்டியதற்கு இடஒதுக்கீடுதான் காரணமா? என்பதுதான் அக்கேள்வி.
அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முஸ்லிம்களை தேசிய நீரோட்டத்திலிருந்தும், அதிகாரத்திலிருந்தும் அகற்றுவதற்கு திட்டமிட்டு முயற்சிகள் நடைபெறும் வேளையில் இத்தகைய முட்டாள்தனமான கேள்விகளை எழுப்பி முஸ்லிம்களை சமாதானப்படுத்தலாம் என எவரும் கருதவேண்டாம். இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் மதசார்பின்மையின் அடித்தளமே சிறுபான்மை மக்களுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவமும், உரிமைகளுமாகும். அவர்களை புறந்தள்ளிவிட்டு எந்த சமூகமும் முன்னேற முடியாது.
ஆதலால் காங்கிரஸும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் செய்யவேண்டியது என்னவெனில் முஸ்லிம்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதாகும். முஸ்லிம் வேடம்பூண்ட ஷாநவாஸ் ஹுஸைன், முக்தா அப்பாஸ் நக்வி போன்ற எட்டப்பர்களை விலைக்கொடுத்து வாங்கிவிட்டு அவர்கள் மூலமாக ஊளையிடும் பா.ஜ.க, சங்க்பரிவார்களின் அச்சுறுத்தலுக்கு மத்திய அரசு பணிந்துவிடக் கூடாது. இத்தகைய களத்து மேட்டு காளான்களை அதற்குரிய மதிப்புடன் புறக்கணிப்பதே சிறந்தது!
அ.செய்யது அலீ.
நன்றி தூது ஆன்லைன்
0 comments:
Post a Comment