கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்தால், நிபுணர்களின் அறிவுரைப்படி கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நிலையில், 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவருக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்த பின்னர் , 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 95.31 சதவீதம் பேர், குணமடைந்துள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுவதாகவும், 20 லட்சம் தடுப்பூசிகள் உட்பட சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றினால், முழு ஊரடங்கு வராது என்று அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment