நமது அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள மதசார்பற்ற ஜனநாயக விழுமியங்களுக்கு நீண்ட காலமாக நடந்து வருகின்ற சோதனைதான் பாபரி மஸ்ஜித் பிரச்சனையும் நடந்துவருகின்ற வழக்கும் சுமார் 60 வருடகாலமாக முஸ்லிம்கள் பொறுமையோடு சட்டரீதியாக போராடிப் பெற்ற உயர் நீதிமன்றத்தீர்ப்பு நமக்கு அதிர்ச்சியை அளிக்கின்றது. ஆனால் உயர் நீதிமன்றத்தீர்ப்பு இறுதியானதல்ல. உச்ச நீதிமன்றம் இருக்கிறது. உ.பி. சுன்னத் முஸ்லிம் வக்ஃப் வாரியமும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று திட்ட வட்டமாக அறிவித்துள்ளது.
எனவே இதில் விரக்தி அடையவோ ஆவேசம் அடையவோ ஒன்றும் இல்லை. குறிப்பாக இளைஞர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது, நீங்கள் தான் சமூகத்தின், தேசத்தின் எதிர்காலம் எனவே பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும். உலக வரலாற்றில் சில நீதிமன்ற தீர்ப்புகள் கூட மிகப்பெரிய சமூகமாற்றத்தை மிகப்பெரிய விழிப்புணர்வை மிகப்பெரிய எழுச்சியை உண்டுபண்ணியிருக்கின்றது. எனவே இந்திய முஸ்லிம்களாகிய நாமும் மதசார்பற்ற விழுமியங்கள் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து இந்திய மக்களும் ஒன்றிணைந்து நீதிக்காக போராடக்கிடைத்த வாய்ப்பாக இதனைக்கருதி சட்ட ரீதியிலும் ஜனநாயக அடிப்படையிலும் போராடி பாபரி மஸ்ஜிதின் நிலத்தை மீட்க வேண்டும். பொது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் என்றென்றும் பேணிபாதுகாக்க வேண்டும். எனவே இந்திய முஸ்லிம்கள் நம்பிக்கையுடன் செயல்படிவேண்டிய தருணம் இது. நிச்சயமாக நம்பிக்கையுடன் செயல்படுவார்கள் என்று நம்புகின்றேன்.
பாப்புலர் ஃப்ரண்டின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
பாப்புலர் ஃப்ரண்ட் முஸ்லிம் சமூகத்தையும், மதசார்பற்ற விழுமியங்கள் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து இந்திய மக்களையும் ஒன்றிணைத்து ஜனநாயக மற்றும் சட்டரீதியான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி பாபரி மஸ்ஜிதின் நிலத்தை மீட்கப்போராடும். இன்ஷாஅல்லாஹ்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதற்கு பங்காற்றியது போலவே, உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதிலும் முக்கிய பங்காற்றுவோம். பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் டெல்லியில் அமர்ந்து நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றார்கள். உ.பி. சுன்னத் வக்ஃப் வாரிய வழக்கறிஞர்களோடும் சட்ட வல்லுநர்களோடும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நீதியின் மீதும், மதசார்பற்ற விழுமியங்களின் மீதும் நம்பிக்கையுள்ள சட்ட வல்லுனர்களை ஒருங்கிணைத்து நீதிக்கான போராட்டத்தை வலுப்படுத்துவதைப் பற்றியும் ஆலோசித்து வருகின்றோம். தமிழகத்தில் செயலகக் குழுவில் கலந்தாலோசனை செய்துள்ளோம். விரைவில் மாநில செயற்குழுவும் கூடவிருக்கின்றது. அதில் இது சம்பந்தமாக கலந்தாலோசனை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம். பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்வது, முஸ்லிம் சமூகம் இதில் விரக்தியடையவோ, நிராசையடையவோ வேண்டிய அவசியம் இல்லை.
இது இறுதியான தீர்ப்பும் இல்லை. சட்டத்தின் அடிப்படையில், உண்மையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நீதிக்கான குரல்கள் வலுக்க ஆரம்பித்துள்ளது. உண்மை மற்றும் ஆவணங்களை அடிப்படையாக வைத்து சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்பட்டால் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் நமக்கு நீதி கிடைக்கும். எனவே தொடர்ந்து நாம் நீதிக்கான பயணத்தை முன்னெடுத்துச் செல்வோம். இன்ஷாஅல்லாஹ் நீதி நிலைபெறும்.
0 comments:
Post a Comment