Monday, December 13, 2010

எம்பிபிஎஸ்-நுழைவுத் தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு: தமிழக மாணவர்களுக்கு பாதி்ப்பு!

டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் இன்று பிறப்பித்த உத்தரவில், பொது நுழைவுத் தேர்வுக்கான விதிமுறைகள், முறைப்பாடுகளை வகுக்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.

இந்த உத்தரவின் மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இனிமேல் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை. அந்த முறையை தமிழக அரசு ரத்து செய்து விட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவால் தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் வந்துள்ளன. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்பையும், பாதகத்தையும் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவுக்கு ஏற்கனவே இந்திய மருத்துவக் கவுன்சில் வந்து விட்டது. ஆனால் தமிழக அரசு உள்பட பல்வேறு மாநிலங்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டு மனு செய்தது இந்திய மருத்துவக் கவுன்சில்தான். அந்த வழக்கை விசாரித்துதான் தற்போது இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

மத்திய செகண்டரி கல்வி வாரியத்துடன் இணைந்து 2011ம் ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்துவது குறித்த ஆலோசனைகளை ஏற்கனவே மருத்துவக் கவுன்சில் தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாடு முழுவதும் 32,000 எம்.பி.பி.எஸ். மாணவர் இடங்களும், 13,000 முதுநிலை மருத்துவ இடங்களும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இதில் இளநிலைப் படிப்புகளுக்கு இனிமேல் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

0 comments:

Post a Comment