Monday, November 15, 2010

வெற்றிக்கு வழிகாட்டும் தூய எண்ணம்


“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூற்கள்: புகாரி,முஸ்லிம்
    இந்த ஹதீஸின் மூலம் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் எண்ணம் அவசியம் என்பதை நன்கு விளங்கலாம். நம்முடைய எண்ணத்தின் அடிப்படையிலே தான் நம்முடைய அமல்களுக்கு அல்லாஹ் மறுமையில் கூலி வழங்குகிறான்.
    “நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ, உங்கள் பொருட்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், உங்கள் செயல்களையுமே பார்க்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்
    “மறுமையில் தீர்ப்புக் கூறப்படும் அந்நாளில் ஒரு உயிர்த்தியாகி அல்லாஹ்விடத்தில் அழைத்து வரப்படுவார். அவரிடம் இறைவன் அம்மனிதருக்கு தான் செய்த அருட்கொடைகளை எடுத்துக் காட்டுவான். அவரும் அதை உணர்ந்து கொள்வார். அவரிடம் ‘எனக்காக என்ன செய்தாய்?’ என இறைவன் கேட்பான். ‘உனக்காகப் போர் செய்தேன். அதனாலேயே கொல்லப்பட்டேன்’ எனக் கூறுவார். அப்பொழுது இறைவன் ‘நீ பொய் சொல்கிறாய், நீ வீரன் என்று புகழப்பட வேண்டும் என்பதற்காகப் போர் செய்தாய். அவ்வாறு கூறப்பட்டு விட்டது’ என்று கூறுவான். பிறகு (மலக்குகளை அழைத்து) அம்மனிதரை நரகில் முகம் குப்புற தள்ளும்படி கட்டளையிடுவான்…” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ”ரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
    மேற்கண்ட ஹதீஸின் மூலம் தூய்மையான உள்ளம் எவ்வளவு முக்கியமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம். படைத்த இறைவனுக்கு ஒரு மனிதன் செய்யக்கூடிய அதிகபட்ச தியாகமாக என்ன செய்ய முடியுமோ, அந்த தியாகத்தை, அதாவது உயிரை அல்லாஹ்வின் பாதையில் இழந்துள்ளார். இதை யாரும் மறுக்க முடியாது. அவ்வளவு எளிதாக யாரும் செய்ய முடியாத தியாகத்தைச் செய்தபோது எண்ணம் சரியில்லாத காரணத்தினால் அவர் நரகத்திற்கு செல்வதை இந்த நபிமொழி நமக்கு உணர்த்துகிறது. ஆனால், நாம் உணர்ந்திருக்கிறோமா? என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
    இன்று பெரும்பாலான மனிதர்கள் தங்களுடைய இறைவனுக்கு செய்ய வேண்டிய நல்ல அமல்களை பேருக்காகவும், புகழுக்காகவும், பணத்திற்காகவும் செய்யக்கூடிய பரிதாபகரமான சூழ்நிலைகளை பார்க்கிறோம். அவர்கள் இது குறித்து எந்தவிதமான வருத்தமும் இல்லாமல் மிக எளிதாக செயல்படுகிறார்கள். இவர்களைப் பற்றித் தான் படைத்த இறைவன் தன் திருமறை குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.
    எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய கூலி இவ்வுலகத்திலேயே நிறைவேறும். அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை. (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே. (அல்குர் ஆன் 11:15,16)
    எனவே, நம்முடைய அமல்களை தூய எண்ணத்துடன் செய்ய செய்யவேண்டும். மற்றவர்கள் பார்ப்பதற்காக, புகழ்வதற்காக என்று செயல்பட்டால் மறுமையில் நாம் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டும். வல்ல இறைவன் நம் அனைவரையும் தூய்மையான எண்ணங்களுடன் வாழ கிருபை செய்வானாக! ஆமீன்.


0 comments:

Post a Comment